உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கைகோர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

 

உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கைகோர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. வார்டு மறுவரையறை பணிகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளிப்போனது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கைகோர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

தேர்தலுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படாமல் இருக்கும் நிலையில் வாக்காளர் பட்டியல், வாக்குச்சீட்டுகள், வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம் என்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க இப்போதே ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாநில குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பின் கே.பாலகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் கைகோர்த்தது. திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2 இடங்களில் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.