30 ரூபாய் கூலி உயர்வு கேட்ட பேரணியில் 17 பேர் கொல்லப்பட்ட கதை! #தாமிரபரணி_படுகொலை

 

30 ரூபாய் கூலி உயர்வு கேட்ட பேரணியில் 17 பேர் கொல்லப்பட்ட கதை! #தாமிரபரணி_படுகொலை

விக்ரம், திரிஷா நடித்த ‘சாமி’ படம் பார்த்திருக்கிறீர்களா… அதில் திருநெல்வேலி மாநகரில் வில்லன் கோஷ்டி ஒரு பேரணியாகச் செல்வார்கள். கலவரம் ஏற்படுத்துவதற்கு முன் விக்ரம் அப்பேரணியில் கலந்து கொண்டவர்களில் பலரைச் சுட்டுக்கொல்வார். இது சினிமா கதை.

ஆனால், அதே திருநெல்வேலியில் ஒரு மாபெரும் பேரணி நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் வில்லன் கோஷ்டியினர் அல்ல. தேயிலைத் தோட்ட ஏழைத் தொழிலாளிகள். தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக வந்த அவர்களில் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது நிஜக்கதை. கண்ணீரும் ரத்தமும் மரண ஓலமும் தவிப்பும் நிறைந்த சோகக் கதை. இனி எங்கும் இப்படி நிகழ்ந்து விடக் கூடாது என நினைக்கும் கதை.

30 ரூபாய் கூலி உயர்வு கேட்ட பேரணியில் 17 பேர் கொல்லப்பட்ட கதை! #தாமிரபரணி_படுகொலை
Manjolai pc: wikipedia.

திருநெல்வேலியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு அருகே உள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். எங்குப் பார்த்தாலும் பசுமை, உடலை உரசிச் செல்லும் குளிர்க் காற்று எனப் பார்க்கப் பார்க்க சுகமான இடம். ஆனால், அந்தத் தேயிலைத் தோட்டத்தில் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை சுகமானதாக இல்லை. குறைவான கூலி; வேலை நேரம் அதிகம் என பசிக்கு தங்கள் ரத்தத்தை இரையாகக் கொடுத்து வந்தனர்.

1999 –ம் ஆண்டு இதே நாள் (ஜூலை 23) மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு பேரணியாகச் சென்றனர். அவர்கள் கோரிக்கை ஆடம்பரமான வாழ்க்கை வசதிகளைக் கேட்டு அல்ல… முதுகு வலிக்க வலிக்க தேயிலைப் பறிக்க தினக்கூலியாகக் கொடுக்கப்படும் 70 ரூபாயை 100 ரூபாயாக அதிகரிக்கவும்,  எட்டு மணி நேரமாக வேலை நேரத்தை வரையறுக்கவும், கர்ப்பக் காலத்தில் பெண்கள் விடுமுறையும் என அடிப்படையான விஷயங்களைத்தான் கேட்டார்கள் அவர்கள்.

30 ரூபாய் கூலி உயர்வு கேட்ட பேரணியில் 17 பேர் கொல்லப்பட்ட கதை! #தாமிரபரணி_படுகொலை
Manjolai pc: google

சுமார் 600க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் கலந்துகொண்ட பேரணி திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தொடங்குகிறது. ஆம். குழந்தைகளோடு மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். ஏனெனில் தங்களின் உழைப்பும் சேர்க்கும் காசும் அக்குழந்தைகளுக்குத்தானே. பேரணி கொக்கிரகுளம் பாலத்தைக் கடக்கிறது. பேரணிக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இடதுசாரி கட்சித் தலைவர்கள், இஸ்லாமியக் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் தலைமைத் தாங்கி முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் பாலம் தாண்டியதும் காவல் துறை தன் வழக்கமான உத்தியைக் கையாள்கிறது. தலைவர்களை மட்டுமே அனுமதிப்பேன்; மற்றவர்கள் கலைந்து செல்ல சொல்கிறது. இந்தப் பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே மக்கள் மீது கற்கள் வீசப்படுகின்றன.

ஏற்கெனவே தயாராக வைத்திருந்த கற்களை வீசுவதுபோல தொடர்ந்து கற்கள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்டன. பொதுமக்கள் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோட எங்கு செல்வது என அல்லாடினார்கள். சிறிதுநேரத்தில் அந்த இடமே கலவர பூமியாக மாறியது. போலிஸார் கையில் கிடைத்தவர்களை அடிக்க, மக்கள் செய்தவறியாது தவித்தனர். அவர்கள் தப்பிக்க இருந்த ஒரே வழி தாமிரப்பரணி ஆற்றில் குதிப்பதுதான். பலர் அதில் குதித்தார். ஆயினும் போலிஸாரின் லத்தி வெறிகொண்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கியது.

30 ரூபாய் கூலி உயர்வு கேட்ட பேரணியில் 17 பேர் கொல்லப்பட்ட கதை! #தாமிரபரணி_படுகொலை
Manjolai pc: google

காவல் துறையின் கொடுர வேட்டைக்கு 17 பேர் பலியானார்கள். அந்த 17 பேரில் சின்னஞ்சிறு குழந்தை விக்னேஷூம் அடக்கம் என்பதுதான் பெரும்ச்சோகம். விக்னேஷுன் அம்மா, ஆற்றில் சிக்கிக்கொண்டு தவிக்க, மகனாவது பிழைக்கட்டும் என விக்னேஷைக் கரையில் தூக்கிப் போட, அந்தக் குழந்தையையும் தாமிரப்பரணி ஆற்றுக்கு காவுக்கொடுக்க போலிஸார் தூக்கி எறிந்ததாக சாட்சிகள் சொல்கிறார்கள். வரலாற்றில் எங்கு நடக்கும் இந்தக் கொடுமை. ஆனால், தமிழகத்தில் நடந்தது. அது ஆண்ட திமுகவுக்கு இன்றும் பெரும் களங்கமாகவே உள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உடல்களை குடும்பத்தினர் வாங்க மறுக்க அரசே புதைத்த கதை இன்னொரு சோகம். இத்தனை உயிர்கள் பலி கொடுத்தபிறகு கூலி உயர்த்தப்பட்டது. ஒருவேளை பேச்சு வார்த்தையின் மூலம் இது நடந்திருந்தால் அந்த விக்னேஷூக்கு இப்போது வயது 23 ஆக இருந்திருக்கும். ஏதேனும் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பான் அல்லது ஏதேனும் ஒரு வேலை செய்துகொண்டிருப்பான்.

தாமிரப்பரணி என்றால் குளிர்ச்சி… தாமிரப்பரணி என்றால் வற்றாத ஜீவநதி எனக் கொண்டாடும் மனநிலையில் தீக்கன்றைத் தூக்கி எறிந்திருக்கிறது இப்படுகொலைகள். இந்தக் கொடூரம் அரங்கேறி இன்றோடு 21 ஆண்டுகள் ஆயிற்று. 30 ரூபாய் கூலி உயர்வுக்கு 17 உயிர்களைப் பலிகொடுத்த துயர வரலாறு இது.

30 ரூபாய் கூலி உயர்வு கேட்ட பேரணியில் 17 பேர் கொல்லப்பட்ட கதை! #தாமிரபரணி_படுகொலை

’பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது புத்தகத்தின் பெயராக ‘தாமிரப்பரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்று வைத்திருப்பார். அவர் இயக்கியப் படத்திலும் கல்லூரி மாணவர்கள் மாஞ்சோலை படுகொலை நினைவு நாளுக்கு போஸ்டர் ஒட்டுக் காட்சியை வைத்திருப்பார். இந்தக் கொடூர வரலாற்றை ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் ‘நதியின் மரணம்’ எனும் ஆவணப்படமாக எடுத்துள்ளார்.

மாஞ்சோலை என்றதுமே கொல்லப்பட்ட 17 பேர் முகங்கள் நினைவுக்கு வருவதை எவராலும் மாற்ற முடியாது.