எதுக்களித்தல் பிரச்னை ஏன் வருகிறது… தடுக்க முடியுமா?

 

எதுக்களித்தல் பிரச்னை ஏன் வருகிறது… தடுக்க முடியுமா?

சிலருக்கு தீவிர நெஞ்சு வலி போல இருக்கும். ஈ.சி.ஜி, எக்கோ எடுத்துப் பார்த்தால் இதயம் நார்மலாக இருக்கும். அதன் பிறகு பார்த்தால் அது தீவிர எதுக்களித்தல் பிரச்னையாக இருக்கும். பலரும் வாயுத் தொல்லை அதனால் அப்படி இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருந்துவிடுவார்கள். எதுகளித்தல் பிரச்னை ஏன் வருகிறது. அதை தவிர்க்க வழி உள்ளதா என்று பார்ப்போம்.

எதுக்களித்தல் பிரச்னை ஏன் வருகிறது… தடுக்க முடியுமா?

கேஸ்ட்ரோ ஈசோஃபீகல் ரெஃப்லெக்ஸ் (Gastro esophageal Reflux Disease (GERD)) என்பதை தமிழில் எதுக்களித்தல் என்று கூறுகிறோம். நாம் உட்கொண்ட உணவு உணவுக் குழாய் வழியாக பயணித்து இரைப்பையை அடைகிறது. அங்குதான் உணவு செரிமானம் ஆகிறது. பல அமிலங்கள் கலந்து உணவு நொதிக்கப்படுவதால், இந்த உணவு மீண்டும் உணவுக் குழாய்க்கு வந்துவிடாமல் இருக்க வால்வு போன்ற அமைப்பு அங்கு உள்ளது. இந்த வால்வு பாதிக்கப்பட்டு அமிலம், நொதிகள் கலக்கப்பட்ட உணவு உணவுக் குழாய்க்கு வரும்போது அது பாதிப்பை ஏற்படுத்தும். இதையே எதுக்களித்தல் என்கின்றனர்.

செரிமானத்துக்காக இரைப்பையில் நொதிகள், அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலத்தின் பாதிப்பை தாங்கும் வகையில் இரைப்பை சுவர் உள்ளது. ஆனால் இதை உணவுக்குழாயால் தாங்க முடியாது. அதனால் புண் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் எதுக்களிப்பின்போது புளிப்பு, துவர்ப்பு சுவையை உணர்வோம். இரைப்பையில் இருந்து உணவுப் பொருள் வாய் வரை வந்துள்ளது என்று அர்த்தம்.

அடிக்கடி எதுக்களித்தல் பிரச்னை ஏற்பட்டால் எதனால் இப்படி வருகிறது என்று பார்க்க வேண்டும். அடுத்தது உணவில் மாறுதல்களைச் செய்ய வேண்டும். காரம், மசாலா உணவுகள் எதுக்களித்தல் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். எனவே, இத்தகைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதில் உணவைப் பிரித்து 6 வேளையாக எடுத்துக்கொள்ளலாம்.

நார்ச்சத்து மிக்க உணவுகள் எதுக்களித்தலைத் தடுக்கும். எனவே, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி செரிமானத்தைத் தூண்டும், செரிமான மண்டலத்தை பலப்படுத்தும். எதுக்களிப்பால் வரும் நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைப் போக்கும். எனவே, இஞ்சியை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி கஷாயம், இஞ்சி டீ என ஏதாவது ஒரு வகையில் இஞ்சியை எடுத்துக்கொள்வது நல்லது.

பழங்கள் நெஞ்சு எரிச்சலைக் கட்டுப்படுத்தும். எனவே, சிட்ரஸ் தவிர்த்து மற்ற பழங்களைச் சற்று அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

முட்டையின் வெள்ளைப் பகுதி நெஞ்சு எரிச்சல் பிரச்னையைப் போக்க உதவும். முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது. அது செரிமானத்துக்கு தாமதம் ஆகி நெஞ்சு எரிச்சலை அதிகப்படுத்தலாம். எனவே, முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

எதுக்களித்தல் பிரச்னை ஏன் வருகிறது… தடுக்க முடியுமா?

கார்பனேட்டட் பானங்கள் அருந்துவது தற்காலிகமாக எதுக்களிப்பு பிரச்னையில் இருந்து விடுபட்ட உணர்வைத் தரலாம். ஆனால் அது பிரச்னையை அதிகமாக்கிவிடும். எனவே, இளநீர், மோர், ஜூஸ், ஸ்மூத்தி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மில்க்க்‌ஷேக்காக அருந்த வேண்டாம்.

படுக்கும்போது, இடதுபுறம் திரும்பிப் படுப்பதுதான் சிறந்தது. 80, 90 சதவிகிதம் அளவுக்கு வயிறு நிரம்பும் வரை சாப்பிட்டால் போதும். அளவுக்கு மீறினால் பிரச்னை.

உணவு செரிமானம் ஆவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். எனவே, சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்துதான் கடின உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.