நடிகர் சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி விட்டது. பதறிப்போய் காவல்துறையினர் விசாரணை நடத்தினால் அது புரளி என்பது தெரியவரும். இப்படி ஒரு சம்பவம் தான் நடிகர் சூர்யா அலுவகத்தில் நிகழ்ந்துள்ளது.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (செப். 28) வந்த தொலைபேசி அழைப்பில் நடிகர் சூர்யாவின் ஆழ்வார்பேட்டை அலுவகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சில நிமிடங்களில் வெடித்து சிதறும் என்றும் கூறிபோனை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் , மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் (20) என்பது தெரியவந்தது.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இவர் ஏற்கனவே முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினி ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.