மே 26 வரை மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் – மமதா பானர்ஜி

 

மே 26 வரை மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் – மமதா பானர்ஜி

கொல்கத்தா: மே 26 வரை மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என மமதா பானர்ஜி மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயல் மேற்கு வங்க மாநிலத்தை பயங்கர சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. ஆம்பன் புயலால் அம்மாநிலத்தில் 86 பேர் பரிதாபமாக பலியாகினர். மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், ஆம்பான் சூறாவளியால் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு மே 26 ஆம் தேதி வரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 26 வரை மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் – மமதா பானர்ஜி

“மாவட்ட நிர்வாகங்கள் ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் நிவாரண மற்றும் புனர்வாழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அடுத்த சில நாட்களுக்கு சிறப்பு ரயில்களை பெற முடியாது. எனவே மே 26 வரை மேற்கு வங்கத்திற்கு எந்த ரயிலையும் அனுப்பக் கூடாது என்று மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது” என்று மமதா பானர்ஜி கூறினார்.

கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை மேற்கு வங்கம் குறைந்த சிறப்பு ரயில்களையே பெற்றுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்க மேற்கு வங்க அரசு மறுப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.