தொப்பையை வேகமாக கரைக்கும் பிளாங்க் பயிற்சி!

 

தொப்பையை வேகமாக கரைக்கும் பிளாங்க் பயிற்சி!

எந்த கருவியும் இல்லாமல் வீட்டிலேயே செய்யக் கூடிய மிக எளிய உடற்பயிற்சி பிளாங்க் (Plamk). இந்த பயிற்சி செய்ய எந்த பொருளும் தேவையில்லை. எந்த ஒரு இடத்திலும் இந்த பயிற்சியை செய்ய முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. இதன் மூலம் உடலுக்கு வலிமையையும் வளைந்துகொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

முதலில் தரையில் குப்புற படுக்க வேண்டும். வயிறு நெற்றி எல்லாம் தரையில் படும்படி படுக்க வேண்டும். கைகளை மடக்கி முன்பக்கமாக வைக்க வேண்டும். கால் விரல்கள் தரையில் பதித்தபடி இருக்க வேண்டும். இப்போது கையை தரையில் பதித்தபடி உடலை மேலே உயர்த்த வேண்டும். முழு உடலும் உள்ளங்கை, கால் விரல்களில் தாங்கியடி இருக்க வேண்டும். இது எளிய பிளாங்க். கால் விரல் மற்றும் கைகளில் உடல் தாங்கும்போது உடல் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். இடுப்பை இறக்கக் கூடாது. ஒரு சில நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்த பயிற்சியை தொடக்கத்தில் 10 முறை செய்யலாம். போக போக எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

தொப்பையை வேகமாக கரைக்கும் பிளாங்க் பயிற்சி!

இந்த எளிய பிளாங்க் பயிற்சி செய்து உடலைத் தயார் செய்த பிறகு முழங்கைகளில் உடலைத் தாங்கும் வகையிலான கடின பிளாங்கை செய்யலாம்.

இதற்கும் முதலில் வயிறு தரையில் பதித்தபடி குப்புற படுக்க வேண்டும். கால் விரல்களை தரையில் பதிக்க வேண்டும். முன்பு உள்ளங்கையைத் தரையில் பதித்து பயிற்சி செய்தோம். அதற்கு பதில் முன்னங்கை முழுவதையும் தரையில் ஊன்ற வேண்டும். இப்போது உடலை தரையிலிருந்து மேலே உயர்த்த வேண்டும். இப்போது முழு உடலுக்கும் கால் விரல் மற்றும் முன்னங்கையில் தாங்கியபடி இருக்க வேண்டும்.

இந்த பயிற்சியை தினமும் செய்து வந்தால் உடலின் பாஸ்ச்சர் சரியாக இருக்கும். முதுகு, தோள்பட்டை, நெஞ்சு, கை, கழுத்து என எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.

உடலின் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகரிக்கும். குறிப்பாகத் தோள்பட்டை மற்றும் முக்கிய தசைகள் உறுதியாவதுடன் உடலின் அசைவுக்கு ஏற்ப வளைந்துகொடுக்கும்.

தொப்பையைக் கரைப்பதுதான் பலருக்கும் கடினமான பயிற்சியாக இருக்கும். இந்த பயிற்சி செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பு வேகமாகக் கரையும். மேலும் உடலின் வளர்சிதை மாற்றப்பணிகள் விரைவுபடுத்தப்படும். எவ்வளவு நேரம் பிளாங்க் நிலையில் இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய உடல், வயிறு உறுதியாகும்.

மூட்டு, முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பை இது குறைக்கிறது. தொடர்ந்து பயிற்சி செய்யும்போது முதுகின் மீதான வயிறு தசையின் அழுத்தம் குறையும். இதன் காரணமாக முதுகு, மூட்டு வலிக்கான வாய்ப்பு குறைகிறது.