வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை இழிவுபடுத்தப்பட்டது

 

வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை இழிவுபடுத்தப்பட்டது

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை இழிவுபடுத்தப்பட்டது

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின நபரின் கொலை குறித்து உலகம் முழுக்க கறுப்பின மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னுடைய காரை நிறுத்திய பின்பும், அவரைப் பிடித்த ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். இதனால் ஃப்ளாய்ட் மூச்சுத் திணறி கடந்த மே 25-ஆம் தேதி இறந்தார்.

இதனால் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், வாஷிங்டன் டி.சி.யில் இந்திய தூதரகத்திற்கு வெளியே உள்ள மகாத்மா காந்தியின் சிலை போராட்டக்காரர்களால் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சிலை தற்போது கவர் கொண்டு முற்றிலும் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

“வாஷிங்டன் டி.சி.யில் காந்தியின் சிலை இழிவு செய்யப்பட்டுள்ளதை கண்டு மிகவும் வருந்துகிறோம். தயவுசெய்து, எங்கள் நேர்மையான மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஜார்ஜ் பிளாய்டின் கொடூரமான மரணம் மற்றும் மோசமான வன்முறை, காழ்ப்புணர்ச்சியால் திகைத்து போயிருக்கிறோம். எப்போதுமே பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் நிற்போம்” என இந்தியாவின் அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் கூறியுள்ளார். இந்த வாரம் வாஷிங்டன் மற்றும் நியூயார்க்கில் வெடித்த போராட்டங்கள் காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.