ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை இளைஞர்கள் !

 

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை இளைஞர்கள் !

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாடுபிடிவீரர்களும் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்து.

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியுடன் தொடங்கும் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்து பல ஊர்களில் நடைபெற உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு 16 ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை இளைஞர்கள் !

இந்த போட்டிகளில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இப்போதே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு மாடுகளையும் மாடு வளர்ப்பவர்கள் தயார் செய்து வருகின்றனர். மதுரை சுற்றுவட்டார இளைஞர்கள் இப்போதே உற்சாகமாக பயிற்சிகளில் இறங்கி உள்ளனர்.

நீச்சல் அடிப்பது, கயிறு ஏறுவது, பச்சைக்குதிரை தாண்டுவது, ஒருவரை தோளில் சுமந்து கொண்டு ஓடுவது என்று பல்வேறு பயிற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து மதுரை அருகே சத்திரப்பட்டியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் கூறுகையில், மாடுபிடி கலை என்பது தனியாக வந்துவிடுவதில்லை. மாடு வளர்ப்போரிடம் துணையாக இருந்து மாடுகளை பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்கிறோன். ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு பயிற்சி அளிக்கும்போதே, நாங்களும் பயிற்சி பெறுகிறோம். மாடுகளை குளத்தில் வீட்டு நீச்சல் அடிக்க வைக்கும் போதே நாங்களும் நீச்சல் அடிக்கிறோம். மாடு ஓடும் போது நாங்களும் ஓடுகிறோம். இப்படி ஒரே நேரத்தில், மாடு, மனிதர்களுக்கு இணைந்து பயிற்சி பெறுவதுதான், மாடுபிடு வீரராக உருவாக முடியும். அது இயல்பான நிகழ்வாக உள்ளதால், மாடுபிடி வீரர்கள் என்பவர்களுக்கு தனியாக பயிற்சி கொடுத்து உருவாக்க முடியாது என்கின்றனர் .

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை இளைஞர்கள் !

நாங்கள் பச்சைக் குதிரை போன்றவை தாண்டும் பயிற்சிகளை செய்வது, மாடுகளின் மேல் ஏறுவதற்கான லாவகம் பெற வேண்டும் என்பதற்குத்தான். மாடு வாடிவாசலில் இருந்து வரும் போதே, நொடிக்குள், துள்ளி குதித்து அதன் திமிலை பிடிக்கவேண்டும். அதற்கு தயாராக வேண்டும் எனில், ஒருவரை குனியவைத்து பச்சைக் குதிரை தாண்டும் பயிற்சிகள் செய்கிறோம். அதேபோல் கால் மூட்டு உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒருவரை, ஒருவர் தோளில் சுமந்து கொண்டு வேகமாக ஓடிப் பழகுகிறோம்.

இதுதவிர கயிறு ஏறுவது, மரம் ஏறவது போன்ற பயிற்சிகள் நமது புஜத்தையும், கைகளையும் வலுவாக்கும். இது மாடு பிடிக்கும் போது நமக்கு வலுவாக இருக்கும். இதுபோன்ற கடுமையான பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால்தான் மாடு அணைக்க முடியும். மாடு பிடிக்கும் நாட்களில் மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொங்கலுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே பழனிக்கு மாலை அணிந்து விரதம் இருக்கிறோம். பின்னர் நடைபயணமாக பழனி முருகன் கோயில் சென்று வணங்கிவிட்டு ஊருக்கு வந்து குலசாமியை கும்பிட்டு பின்னர் பொங்கல் விழாக்களில் கலந்து கொள்கிறோம் என்றனர். இந்த பயிற்சிகள் எல்லாவற்றையும் இளம் தலைமுறை மாடுபிடி வீரர்களுக்கு மூத்த மாடு பிடிவீரர்கள் பயிற்சி அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் என்றனர்.
கடுமையாக பயிற்சிகளுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு மாடு தயாராகிறது. அதற்கு இணையான உழைப்பு , பயிற்சியுடன் மாடு பிடி வீரர்கள் தயாராகின்றனர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு கொண்டாட்டம்தான்!