திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் தற்கொலை!

 

திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் தற்கொலை!

மதுரை

மதுரையில் திருட்டு வழக்கில் போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் மனமுடைந்த துப்புரவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பைகாரா இ.பி.காலனியில் கடந்த வாரம் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை மற்றும் 6 லட்சம் பணம் திருடு போனது. இதுகுறித்து சுப்பிரமணியபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த துப்புரவு தொழிலாளர் கண்ணன்(43) என்பவரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, கண்ணனை போலீசார் தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இன்று கண்ணனை, அவரது மனைவி தனலட்சுமியுடன் நேரில் விசாரணைக்கு ஆஜாராகவும் கூறியுள்ளனர். இதனால், இன்று காலை தம்பதி இருவரும் காவல் நிலையத்திற்கு புறப்பட்ட நிலையில், தனலட்சுமியை முன்னே செல்ல கூறிவிட்டு, தான் பின்னால் வருவதாக கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் தற்கொலை!

தனலட்சுமி பேருந்து நிலையம் சென்று நீண்ட நேரம் ஆகியும் கண்ணன் வராததால் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, கண்ணன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.