10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதால் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

 

10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதால் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..?என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டம், துவரிமானை சேர்ந்த மதுரேசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர். இவர்களை ஊக்குவித்து மத்திய, மாநில அரசு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. இந்த வீரர்களையும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை.
வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. எனவே தமிழகத்தில், சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதால் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி தலைமையிலான அமர்வு, “மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் , வெள்ளிப் பதக்கங்களையும், பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார். இருப்பினும் அவரை தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது. இதே போல பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..? தமிழகத்தில் இந்த வீரர்களை கொண்டாடுவது கிடையாது. தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்களான தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற ஊனமுற்ற ஒருவருக்கு பத்தாவது மட்டுமே படித்துள்ள காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார், கிரிக்கெட் ஸ்டார் ஆகிய 3 ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு எனவும், உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்டவை குறித்து மத்திய மாநில அரசுக்கு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.