`சார், உங்க பொருளை நான் வாங்கிக் கொள்கிறேன்`- QRcode-ஐ ஸ்கேன் செய்த சென்னை இன்ஜினீயருக்கு நடந்த அதிர்ச்சி

ஆன்-லைனில் தனது வீட்டு பொருளை விற்பனை செய்ய முயன்ற சென்னை கப்பல் படை பொறியாளர் ஒருவர், QRcode-ஐ ஸ்கேன் செய்த அடுத்த நிமிடமே ஆயிக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். வட மாநிலத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த நூதன கொள்ளையை அரங்கேற்றியுள்ளது.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பிரேம்ஆனந்த் . இவர் கப்பல்படையில் மூத்த பொறியாளராக பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், “வீட்டிலிருந்த பழைய கட்டிலை விற்க இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தேன். அதைப்பார்த்து என்னுடைய செல்போன் நம்பரில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது, கட்டிலை வாங்கிக் கொள்வதாக கூறி, கட்டிலுக்கான பணத்தை ஆன் லைனில் அனுப்ப QRcode ஒன்றை வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தார். முதல் தடவை ஸ்கேன் செய்தபோது கட்டிலை வாங்க விருப்பம் தெரிவித்தவர் அனுப்பிய 10 ரூபாய் என்னுடைய வங்கி கணக்குக்கு வந்தது. நம்பிக்கையுடன் அடுத்த முறை அந்த நபர் அனுப்பிய QRcode-ஐ ஸ்கேன் செய்தபோது என் வங்கி கணக்கில் இருந்த பணம் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு சென்றுவிட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டேன். என்னை ஏமாற்றிய அந்த வடமாநில மோசடிகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் பிரபாகரன் மற்றும் போலீஸார் பிரேம்ஆனந்த்திடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, “ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்-லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு, QRcode மூலம் பணம் பரிவர்த்தனை நடந்துவருகிறது. கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுக்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளதால் ஏராளமானவர்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர். பிரேம்ஆனந்த்திடம் பணத்தை ஏமாற்றிய நபரின் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் செயல்பட்டுவருகிறது. இந்தக் கும்பல், பழைய பொருள்கள், பைக்குகள், கார்களை விற்பதாக இணையதளத்தில் விளம்பரம் செய்பவர்களின் செல்போனில் முதலில் பேசுவதோடு, தங்களை இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதைப் போல அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். அதை உறுதிப்படுத்த பிரதமர் மோடியிடம் இருந்து விருதுவாங்குவதைப் போன்ற புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைப்பார்கள். அதன்பிறகுதான் தங்களது சுயரூபத்தைக் காட்டுவார்கள். புகார் கொடுத்த பிரேம்ஆனந்த் தனது வீட்டிலிருந்த பழைய கட்டிலை விற்க முடிவு செய்து பழைய பொருள்களை விற்கும் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன் விளம்பரம் செய்துள்ளார்.

அப்போது பழைய கட்டிலின் புகைப்படங்களையும், தன்னுடைய செல்போன் நம்பரையும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து பிரேம்ஆனந்த்திடம் இந்தியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பேசியுள்ளார். பிரேம்ஆனந்த் கூறிய தொகைக்கு கட்டிலை வாங்க சம்மதித்த அந்த நபர், பணத்தை QRcode மூலம் அனுப்புவதாகக் கூறியுள்ளார். அதன்படி மூன்று QRcode-களை அனுப்பியுள்ளார். அதை ஸ்கேன் செய்ததும் பிரேம்ஆனந்தின் வங்கி கணக்கிலிருந்து 50,000 ரூபாய் வரை எடுக்கப்பட்ட மெசேஜை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் QRcode-ஐ அனுப்பியவரின் செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்துள்ளது. எனவே அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி டிஜிட்டர் பணபரிவர்த்தனைகளில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது” என்றனர்.

பிரேம்ஆனந்த் கூறுகையில், “எனது வீட்டில் இருந்த கட்டிலை விற்க பிரபலமான பழைய பொருள்களை விற்கும் இணையதளத்தில் பதிவு செய்தேன். கட்டிலை வாங்குவதாக வடமாநிலத்திலிருந்து ஒருவர் என்னிடம் போனில் பேசினார். நான் கப்பல் படையில் பணியாற்றுவதாகக் கூறியதும் அவர் தன்னை இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகக் கூறினார். அதனால் அந்த நபரை முழுமையாக நம்பினேன். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் பணத்தை பெறலாம் என முடிவு செய்தேன். மிலிட்டரியில் QRcode மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படும். அதனால்தான் அந்த நபர் அனுப்பிய QRcode-ஐ நம்பி ஸ்கேன் செய்தேன். அப்போது என் வங்கி கணக்கிலிருந்த 50,000 ரூபாயை அந்த நபர் எடுத்துவிட்டார். நான் ஏமாந்ததை உணர்ந்தபிறகு அந்த நபர் குறித்த தகவல்களை சேகரிக்க முடிவு செய்து அவரிடம் போனில் பேசி, என் நண்பர் ஒருவரின் வங்கி விவரங்களை அனுப்பி வைத்தேன். இந்தியன் ஆர்மி பிராடு மஞ்சித் என இணையதளத்தில் தேடினால் அவர் குறித்த விவரங்கள் வருகின்றனர். பலர் ஏமாந்த தகவல்களை பதிவு செய்துள்ளனர். இந்த மோசடி கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தால் மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்” என்று கூறினார்.

Most Popular

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து!

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இதையொட்டி...

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...