நின்றிருந்த லாரி முன்னோக்கி நகர்ந்ததில், முதியவர் உடல்நசுங்கி பலி!

 

நின்றிருந்த லாரி முன்னோக்கி நகர்ந்ததில், முதியவர் உடல்நசுங்கி பலி!

திருச்சி

ஶ்ரீரங்கம் அருகே சாலையில நின்ற லாரி முன்னோக்கி நகர்ந்து சென்று கோவில் மீது மோதியதில், ஓய்வுபெற்ற அஞ்சல் துறை ஊழியர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சுண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார்(65). இவர் நேற்று திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பெருமாள் கோவிலில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை காண்பதற்காக, ஶ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்திருந்தார். தீர்த்தவாரியை கண்டுகளித்த பின், அவர் கொள்ளிடம் கரையில் உள்ள கோவில் அருகே நின்றிருந்தார்.

நின்றிருந்த லாரி முன்னோக்கி நகர்ந்ததில், முதியவர் உடல்நசுங்கி பலி!

அப்போது, அந்த வழியாக கிராவல் மண் ஏற்றிவந்த லாரியை ஓட்டுநர் சாலையில் நிறுத்திவிட்டு, அருகில் இருந்த கடைக்கு சென்றிருந்தார். தாழ்வான பகுதியில் நின்றதால் திடீரென முன்னோக்கி நகர தொடங்கிய லாரி அங்கு நின்றிருந்த குமார் மீது மோதி, கோவில் சுவற்றின் மீது இடித்தது. இதில் குமார் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஶ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன், லாரியில் சிக்கிய உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.