மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா… இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!

 

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா… இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!

கிட்டத்தட்ட கொரோனா தொற்று இல்லை என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா… இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!

புதிது புதிதாக மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி வந்துகொண்டே இருக்கிறது. புதிதாக வரும் வைரஸ் கிருமிகள் மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சியை கிளப்புகின்றனர். இந்த சூழலில் வெளியே செல்லும் மக்கள் மிகவும் பாதுகாப்போடு இருப்பதுடன், அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

முன்பு கொரோனா பரவல் என்றால் சுவாசப் பிரச்னை இருக்கும், சுவை, மனம் தெரியாது, காய்ச்சல் இருக்கும் என்ற அளவில் மக்கள் மத்தியில் புரிதல் இருந்தது. ஆனால், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு இந்த அறிகுறிகள் தென்படவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றாக இருந்தால் 99 முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை காய்ச்சல் இருக்கும். உலர் இருமல் இருக்கும். இருமும் போது சளி வராது. தொண்டை கமறல், குரலில் மாற்றம், எரிச்சல், தடித்த குரல் போன்றவை இருந்தால் அதுவும் கொரோனா பாதிப்பாக இருக்கலாம்.

இந்த தெரிந்த அறிகுறிகளுடன், பார்வைத் திறன் திடீரென்று குறைவது, தசை வலி, உடல் வலி, தலைவலி, மூட்டுகளில் வீக்கம் போன்றவை இருந்தால் அது கொரோனா தொற்றாக இருக்கலாம். சுவாத் திணறல், பசியின்மை, உடல் சில்லிட்டுப் போவது, குமட்டல், வாந்தி, குழப்பமான மனநிலை, தொடர்ந்து சேர்வு, ஆற்றல் இழந்த உணர்வு போன்றவையும் கொரோனா அறிகுறிகள் என்று வகைப்படுத்தியுள்ளனர்.

சருமத்தில் ஒவ்வாமை, அரிப்பு, கண்கள் சிவத்தல், கண்ணிலிருந்து நீர் வழிதல், கண் வீக்கம், முடி கொட்டுதல், காது வலி ஆகியவையும் இருந்தது என்று பல நோயாளிகளும் தெரிவித்துள்ளனர்.

எனவே, காய்ச்சல், சுவாசிப்பதில் திணறல், சுவை உணர்வு குறைவது மட்டுமே கொரோனா என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். இந்த அலட்சியம் நம்மை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு கொரோனா பரவ காரணமாகிவிடலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்!