ஆஸ்திரேலிய மிருகக்காட்சிசாலையில் பெண் பணியாளரை தாக்கிய சிங்கங்கள்

 

ஆஸ்திரேலிய மிருகக்காட்சிசாலையில் பெண் பணியாளரை தாக்கிய சிங்கங்கள்

சிட்னி: ஆஸ்திரேலிய மிருகக்காட்சிசாலையில் பெண் பணியாளரை சிங்கம் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஷோல்ஹேவன் மிருகக்காட்சிசாலை உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் இந்த மிருகக்காட்சிசாலை மூடப்பட்டுள்ளது. அதனால் இங்கு சுற்றுலா பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இங்குள்ள சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள கூண்டை சுத்தம் செய்வதற்கு 35 வயது கொண்ட பெண் பணியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு சிங்கங்கள் அந்த பெண் பணியாளரை தாக்கத் தொடங்கின.

இந்த தாக்குதலில் அந்த பெண் பணியாளரின் தலையிலும், கழுத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக சிங்கங்களின் கூண்டிலிருந்து மீட்கப்பட்ட அவருக்கு மிருகக்காட்சிசாலையை சேர்ந்த துணை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க மிருகக்காட்சி சாலைகளில் சுற்றுலா பார்வையாளர்கள் அல்லது பணியாளர்கள் விலங்குகளால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.