தாய்ப்பால் புகட்டுவதால் தாய்-சேய்க்கு ஏற்படும் நன்மைகள்!

 
Breastfeeding

கருத்தரித்ததில் இருந்து குழந்தை பிறக்கும் வரை தாய் சாப்பிடும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை குழந்தை பெற்றுக்கொள்ளும். உள் உறுப்புக்கள் உருவாக்கம், வளர்ச்சிக்கு தாய் உட்கொள்ளும் உணவுதான் அவசியம். குழந்தை பிறந்த பிறகு தாய் புகட்டும் தாய்ப்பால்தான் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதிலிருந்து எதிர்காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் என பல்வேறு பாதிப்புகள் வராமல் தடுக்க தாய்ப்பால் புகட்டுவது மிகவும் அவசியம்.

ஆனால், பல பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பது இல்லை. இதனால், தாய்ப்பால் புகட்டுவதற்குப் பதில் ஃபார்முலா பால் புகட்டுகின்றனர். வெகு சில பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதால் அழகு கெடும், அசௌகரியம் என்று கருதி தாய்ப்பால் புகட்டுவது இல்லை. தாய்க்கும் - சேய்க்கும் தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்...

குழந்தைக்கு...

குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், அத்தியாவசிய கொழுப்பு அமிலம், வைட்டமின், தாதுஉப்புக்கள் அடங்கியதாக இருக்கும். இதில் இருந்து மட்டுமே குழந்தை ஊட்டச்சத்துக்களைப் பெறும்.

பச்சிளம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வளர்ச்சி அடைந்திருக்காது. தாயிடமிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் குழந்தையை நோய்த் தொற்று, ஒவ்வாமை போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

ஃபார்முலா பால் குடித்த குழந்தைகளைக் காட்டிலும் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் உடல் பருமன் ஆவதற்கான வாய்ப்பு குறைகிறது.

தாய்ப்பால் மிக எளிதாக செரிமானம் ஆகக் கூடியதாக இருக்கும். இதனால் வயிற்றுப்போக்கு, வயிறு நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.

தாய்ப்பால் குழந்தையின் மூளை வளர்ச்சி, ஐக்யூ மேம்பாட்டுக்கு உதவுகிறது.

தாய்க்கு...

தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் பிரசவத்துக்குப் பிறகான உடல் எடை அதிகரிப்பு தடுக்கப்படுகிறது. உடல் எடை குறைப்பு விரைவுபடுத்தப்படுகிறது.

தாய்ப்பால் புகட்டுவது கர்ப்பப்பை தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்ப, பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கைத் தடுக்க உதவுகிறது.

தாய்ப்பால் புகட்டுவது கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய் போன்றவற்றை தடுக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கச் செய்கிறது.

தாய்ப்பால் புகட்டுவது ஆக்சிடோசின் என்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தத்தை இது தவிர்க்க உதவுகிறது.