ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாம்! - அதிர்ச்சித் தகவல்

 
Diabetes

ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையை நம்முடைய உடல் பயன்படுத்த முடியாமல் தேங்கும் நிலையைச் சர்க்கரை நோய் என்று கூறுகிறோம். நம்முடைய கணையத்தில் சுரக்கும் இன்சுலின்தான் இந்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. உணவு உட்கொண்டதும் செல்கள் பயன்படுத்த ஏதுவாக கணையத்தில் இன்சுலின் சுரக்கிறது. இன்சுலின் போதுமானதாக இருந்தால், அதன் செயல்திறன் போதுமானதாக இருந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உயிருக்கே ஆபத்தான நிலைக்கு கொண்டு போய் விட்டுவிடும்.

ஆண், பெண் என இருபாலருக்கும் சர்க்கரை நோய் ஏற்படலாம். இருப்பினும், ஆணைக் காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவில் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று மருத்துவ உலகம் கூறுகிறது. மேலும், சர்க்கரை நோயால் ஏற்படும் அதீத பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகம்.

சர்க்கரை நோய் பெண்களுக்கு இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், பார்வை இழப்பு, மன அழுத்தம், சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று, இனப்பெருக்க மண்டல பிரச்னைகள் என பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் அறிகுறிகள் கூட ஆண், பெண் என இருபாலருக்கும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஆண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளுடன் பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று, சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று கூடுதலான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும், சர்க்கரை நோய் உள்ள ஆண்களைக் காட்டிலும்  பெண்களுக்கே இதய நோய், பார்வை இழப்பு போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்பட்டால் அதன் காரணமாக சீரற்ற மாதவிலக்கு, பாலியல் ஆர்வம் குறைவு, குழந்தைப் பேறின்மை, நரம்புகள் பாதிப்பு, முன் கூட்டியே மாதவிலக்கு சுழற்சி நிற்பது (மெனோபாஸ்), மெனோபாஸ் தொடர்பான பிரச்னைகள் அதிகரிப்பது, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்றவை ஏற்படலாம். அதிலும் கர்ப்ப காலத்தில் முன் கூட்டியே குறைப் பிரசவம் நடப்பது, குழந்தை உடல் எடை அதிகரிப்பது, கருச்சிதைவு, குழந்தைக்குப் பிறவிக் குறைபாடு போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கப் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வீட்டு வேலையே உடற்பயிற்சிதான் என்று விட்டுவிடக் கூடாது.

சரிவிகித சத்தான உணவை சாப்பிட வேண்டும். மீதமாகிவிட்டது, உணவு வீணாகக் கூடாது என்று கண்டதையும் சாப்பிடக் கூடாது.

முழு தானியங்கள், நார்ச்சத்து, காய்கறி, முட்டை, மீன், பழங்கள், பால், பயிறு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இனிப்புகள், ஜங்க் ஃபுட், பேக்கரி உணவுகள், ஜூஸ், கோலா, சோடா போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் சர்க்கரை நோய் பாதிப்பின்றி வாழலாம்.