முகம் காட்டும் ஊட்டச்சத்து பற்றாக்குறைகள்!

 
Vitamin Deficiency

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, வைட்டமின்ஸ் மினரல்ஸ் அதிகம் கொண்ட காய்கறி, பழங்கள் ஊட்டச்சத்து உணவுகள் மிகவும் அவசியம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களாக இருந்தாலும் ஆரோக்கியமான சரிவிகித ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது அதை நம்முடைய உடல் நம்முடைய முகத்திலேயே வெளிப்படுத்துகிறது.

சருமத்தில் வறட்சி, முகப்பரு ஏற்பட்டால் ஹார்மோன் பிரச்னை என்று கூறுவோம். மேலும் முகத்தில் அதிக அழுக்கு, கிருமிகள் படிவதாலும் முகப்பரு ஏற்படுகிறது. சில வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாகவும் முகப்பரு ஏற்படலாம். வைட்டமின் ஏ, இ பற்றாக்குறை இருந்தால் வைட்டமின் பி12 போதுமான அளவு கிடைக்காமல் இருந்தால் கூட முகத்தில் முகப்பரு போன்ற பிரச்னை ஏற்படலாம்.

அலர்ஜி காரணமாக முகத்தில் வீக்கம் ஏற்படலாம். தொடர்ந்து காலையில் எழுந்திருக்கும்போது முகம் வீக்கமாக இருக்கிறது என்றால் அயோடின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். அயோடின் பற்றாக்குறை காரணமாக தைராய்டு தொடர்பான நோய்கள், சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, கண்கள் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் ஈறுகளில் வீக்கம், ரத்தக் கசிவு போன்ற ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். ஈறுகளில் வைட்டமின் சி பற்றாக்குறை காரணமாக ஏற்படும் பாதிப்பை ஸ்கார்வி என்று சொல்வார்கள். வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, லெமன் போன்ற பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி-யை மிக எளிதாக பெற முடியும்.

உதடுகள் வெளிறிப்போக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இரும்புச் சத்து பற்றாக்குறை காரணமாக ஏற்படும் ரத்த சோகை காரணமாகவும் உதடுகள் வெளிறிப்போகலாம். இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி தடைப்படுகிறது. இதனால் உடல் முழுக்க செல்களுக்கு ஆக்சிஜன் கொண்டு போய் சேர்க்கும் பணியில் குறைபாடு உண்டாகிறது. இதன் காரணமாக சருமம், உதடுகள் வெளிறிப்போகின்றன.

முடி ஜீவன் இன்றி இருக்கிறது, வறட்சியாக இருக்கிறது என்றால் பயோடின் எனப்படும் பி7 பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். இந்த பி7-தான் கூந்தலுக்கான ஊட்டத்தைக் கிடைக்கச் செய்கிறது. பற்றாக்குறை ஏற்படும்போது பொடுகு, முடி அடர்த்தி குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.