ஓமிக்ரான் பரவும் நேரத்தில் நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள்

 
Lung

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

டெல்டா மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகளை வைத்து ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். அதில் அதில் ஒமைக்ரான் தொற்றால் நுரையீரல் பாதிப்பு, எடை குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் 12 நுரையீரல் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் கொரோனாவை விட ஒமைக்ரானின் பரவல் மெதுவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

lungs

ஆரோக்கியமான நுரையீரலை பெறுவதற்கு நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

​ஆப்பிள்கள்

ஆப்பிளில் உள்ள பினோலிக் கலவைகள் மற்றும் பிளவனாய்டுகள் காற்று பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை குறைவாக உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

​கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால் அவை நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து எளிதில் குணமாக வழி வகுக்கிறது. இதிலுள்ள ஆக்சிஜனேற்ற குர்செடின் ஆன்ட்டி ஹிஸ்டமைன் ஆக செயல்படுகிறது. இது ஒவ்வாமையினால் ஏற்படும் ஹிஸ்டமைன் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. கொரியாவில் ஒரு நாளைக்கு 2 கப் கிரீன் டீ அருந்திய ஆயிரம் பெரியவர்களை வைத்து ஆய்வு செய்தபோது, கிரீன் டீயை குடிக்காதவர்களைவிட , குடித்தவர்களின் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கானாங்கெளுத்தி மீன்

மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் நாட்பட்ட நுரையீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் நுரையீரல் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

​நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள் நமது நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மற்றொரு சூப்பர் ஃபுட் உணவாகும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா மற்றும் பூசணி விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை நமது உடலுக்கு தேவையான மெக்னீசியத்தைப் தருகின்றன. இது நமது சுவாச பாதைகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

​வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்

வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை அடங்கியுள்ளன. அவை நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், நுரையீரலில் ஏற்படும் திசு சேதத்தை தடுக்கவும் உதவுகிறது.

​ப்ரக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள சல்போராபேன் எனும் கலவை நுரையீரல் உயிரணுக்களில் காணப்படும் மரபணு செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் நுரையீரலில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. மேலும் நுரையீரலில் காற்று ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

​இஞ்சி

பொதுவாக நமது சமையலறையில் எப்போதும் இருக்கும் ஒரு பொருட்களில் இஞ்சியும் அடங்கும். இஞ்சியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. இது நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நுரையீரலில் உள்ள மாசுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது. மேலும் காற்று பாதைகளை சீராக்கி நுரையீரலை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

​பூண்டு

பூண்டும் பெரும்பாலும் நமது சமையலறையில் உள்ள மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருளாகும். இந்தப் பூண்டில் உள்ள பிளேவனாய்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றது. இதனால் நுரையீரல் செயல்பாடு மேம்படுகிறது. மூன்று பல் பூண்டுகளைப் வாரத்திற்கு இரண்டு முறை உட்கொண்டவர்களை நுரையீரல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 44 சதவிகிதம் குறைவு என்று ஆய்வில் கூறப்படுகிறது.

​முழு தானியங்கள்

உங்கள் உணவில் பிரவுன் ரைஸ், முழு கோதுமை போன்ற தானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் நாள்பட்ட நுரையீரல் நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. மேலும் நமது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.