குழந்தைகளுக்கு இடையேயான பொறாமை… சமாளிக்க வழிகள்!

 

குழந்தைகளுக்கு இடையேயான பொறாமை… சமாளிக்க வழிகள்!

எனக்கு தம்பி/தங்கை மட்டும் பிறக்காம இருந்திருந்தா என் லைஃப்ல எனக்கு எல்லாமே கிடைச்சிருக்கும்… வளர்ந்து பெரிய பொசிஷனுக்கு சென்றவர்கள் கூட சர்வ சாதாரணமாகச் சொல்லக்கூடிய டயலாக் இது.

இரண்டாவது குழந்தை பிறக்கும்போது முதல் குழந்தைக்கு பொறாமை ஏற்படுவது இயல்பான விஷயம்தான். இரண்டாவது குழந்தை பிறக்கும் போது பொறாமை கொல்லாத முதல் குழந்தை உலகத்தில் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். பெற்றோர்தான் இந்த பொறாமை குணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு இடையேயான பொறாமை… சமாளிக்க வழிகள்!

தம்பிப் பாப்பா வேண்டும், தங்கச்சிப் பாப்பா வேண்டும் என்று குழந்தைகள் கேட்கத்தான் செய்வார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகுதான் தனக்கான முக்கியத்துவம் இழந்ததை அவர்கள் உணர்வார்கள். அது அவர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தும். இது நாள் வரை தன்னை தூக்கிவைத்து கொஞ்சியவர்கள் புதிதாக வந்த குழந்தையை கொஞ்சுகிறார்களே என்று மன வருத்தம் கொள்வார்கள்.

இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு இருந்தே முதல் குழந்தையை தயார் செய்து வந்தால் மட்டுமே இந்த பொறாமை எண்ணத்தை முதல் குழந்தை மனதில் இருந்து போக்க முடியும்.

முதல் குழந்தைக்கு இரண்டு வயதாவதற்கு முன்பே இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறது என்றால் சமாளிப்பது கொஞ்சம் எளிது. தாயின் வயிற்றில் இரண்டாவது குழந்தை இருக்கும்போதே நீ பெரிய அக்கா, பெரிய அண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி அவர்கள் மனதில் பொறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டாவது குழந்தைக்கு முன்பு முதல் குழந்தை மிகப்பெரிய ஹீரோ போல கொண்டாடப்பட வேண்டும். குழந்தைக்கு எல்லாமே நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டாம்.

முதல் குழந்தை குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று சொல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் இரண்டாவது குழந்தைக்காக முதல் குழந்தையை புறக்கணிக்கக் கூடாது.

பச்சிளம் குழந்தைக்கு உதவி செய்ய முதல் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும். இது உதவியாக மட்டுமே இருக்க வேண்டும். அதிகாரத் தொனியில் வேலை வாங்குவதாக இருக்கக் கூடாது. இப்படி உதவி செய்ய ஊக்குவிப்பதன் மூலம் இரு குழந்தைகளுக்கு இடையேயான பிணைப்பு அதிகரிக்கும்.

இரண்டாவது குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது. முதல் குழந்தை நிச்சயம் தனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்று அறிய சோதனை செய்யும். இதைப் புரிந்து இருவருமே முக்கியம் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குழந்தைக்காக மற்றொரு குழந்தையை தனிமையில் விட்டுவிட வேண்டாம். அம்மா இரண்டாவது குழந்தையோடு இருந்தால் முதல் குழந்தையோடு அப்பா நேரத்தை செலவிட வேண்டும்.

இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக இருக்க விட வேண்டும். அப்போது உன்னைப் போலவே வாயைக் குவிக்கிறான், நடக்க முயல்கிறான். உன்னைப் போலவே செய்கிறான். உன்னை நன்றாக அடையாளம் கண்டுகொண்டான் என்று சொல்லிச் சொல்லி இருவரும் ஒன்றே என்பதைப் புரிய வைக்க வேண்டும்.