மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்... தவிர்க்கும் வழிகள்!

 
monsoon illnesses

கோடை முடிந்து குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் காலம் குளிர்காலம். ஆனால், தண்ணீர் தேங்கி நிற்பது, மழை நீருடன் கழிவு நீர் கலப்பது போன்ற பிரச்னை காரணமாகத் தொற்று நோய்களும், கொசுவால் ஏற்படும் நோய்களும் மழைக்காலத்தில் சாதாரணமாகிவிட்டது. இந்த மழைக் காலத்தில் குழந்தைகளை எளிதில் தாக்கும் நோய்கள், தீர்வுகள் பற்றிப் பார்ப்போம்.

மழைக் காலத்தில் தேங்கும் நீரில் கொசுக்கள் முட்டையிட்டு அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா என பல நோய்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்து காய்ச்சல், அதிக காய்ச்சல், உடல் வலி, சருமத்தில் சிவப்பு புள்ளிகள், சுவாசித்தலில் சிரமம், வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

கொசுக்களால் பரவும் நோயைத் தவிர்க்க வீட்டைச் சுற்றி கொசுக்கள் வளருவதைத் தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர் கூடு, பழைய பிளாஸ்டிக் பெட் பாட்டல், உரல் போன்றவற்றில் தேங்கும் நீரில் கொசு வளரும். அவற்றை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

உணவு மூலம் பரவும் வியாதிகள் மழைக்காலத்தில் அதிகம். குறிப்பாக மழைக் காலத்தில் டைஃபாய்டு, ஹெபடைட்டிஸ், காலரா போன்ற வயிற்றுப் போக்கு நோய்கள் அதிக அளவில் மழைக் காலத்தில் ஏற்படலாம். நாம் உட்கொள்ளும் உணவு, தண்ணீர் பாதுகாப்பானதாக இல்லாததே இதற்கு காரணம்.

மழைக் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து குளிர வைக்கப்பட்ட, வெதுவெதுப்பான நீரையே அருந்த வேண்டும். அப்போது புதிதாக சமைத்த உணவையே சாப்பிட வேண்டும். ஈ மொய்த்த உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உணவை அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உடலில் பூஞ்சை தொற்று, தொற்றுண்ணிகள் ஏற்படலாம். பஸ், ரயில் போன்ற பொது இடங்களில் மற்றவர்களுடன் நெருக்கமாக புழங்கும் சூழலில் ஒருவர் சருமத்தில் இருந்து மற்றவருக்குப் பரவலாம். துணியை சரியாக காய வைக்காததால், ஈரப்பதம் காரணமாக துணிகளில் பூஞ்சை தொற்று ஏற்படலாம். இந்த துணிகளை அணியும்போது குறிப்பாக உள்ளாடைகளை அணியும்போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் தொற்று ஏற்படலாம். எனவே, நன்கு வெயிலில் உலர்த்திய துணிகளை அணிய வேண்டும்.

மழைக் காலத்தில் சாதாரண சளித் தொல்லை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக சோர்வு, காய்ச்சல் போன்றவை ஏற்படும். ஒரு வாரத்துக்கு இந்த நிலை நீடிக்கும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு தினசரி போதுமான அளவு வெந்நீர் அருந்தக் கொடுக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு அதிகம் சேர்த்த உணவு அல்லது கஷாயத்தைக் குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம். இதன் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டால் அதன் தாக்கம் குறையும். நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

மழை மற்றும் குளிர் காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித சத்தான உணவைக் கொடுக்க வேண்டும். உணவில் அதிக காய்கறிகள், பழங்கள், நட்ஸ் இடம் பெற வேண்டும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி வழங்க வேண்டும். கடைகளில், சாலையோர கடைகளில், ஈ மொய்த்த உணவுகளை வாங்கிக் கொடுக்க வேண்டாம். அதிக காரம், அதிக சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு, வெளியே சென்று வீட்டுக்கு வந்த பிறகு, கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு தங்கள் கைகளை நன்கு சோப் போட்டு கழுவினார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 7 - 8 முறை கைகளைக் கழுவுவது தவறான விஷயம் இல்லை. அது ஆரோக்கியத்துக்கு நல்லது.

குளிர்காலம் தாகம் இல்லை என்று தண்ணீர் அருந்தாமல் இருக்கக் கூடாது. அதிக தண்ணீர் அருந்தும்போது நோய்க் கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட்டுவிடும். தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அது கிருமிகளை அழிக்க உதவும். குழந்தைகள் எப்போதும் உலர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். துணி ஈரமாகிவிட்டால் தயங்காமல் துணியை மாற்றிவிடுங்கள்.