ஒபிசிடி சந்தேகமும் தீர்வும்: டயட் தான் உடல் பருமன் ஏற்படக் காரணமா?

 
obesity

உடல் பருமனான நபரைப் பார்த்தாலே எந்த கடையில் அரிசி வாங்குற என்று கேட்பது வழக்கம். உடல் பருமன் என்றாலே உணவு பழக்கம்தான் காரணம் என்ற எண்ணம்தான் இது போன்ற கேலிக்கும் கிண்டலுக்கும் காரணம். உடல் பருமன் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாக உடல் பருமன் என்றால் பலருக்கும் தோன்றும் சந்தேகங்கள் பற்றி பார்ப்போம்.

உடல் பருமன் என்றால் என்ன?

உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உடல் நலக் குறைபாட்டை ஏற்படுத்துவதையே உடல் பருமன் என்று கூறுகிறோம். பிஎம்ஐ அளவீட்டில் 25க்கு மேல் இருந்தால் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லை என்று அர்த்தம்.

உணவு பழக்கம்தான் உடல் பருமன் ஏற்படக் காரணமா?

பலரும் தவறான உணவு பழக்கம் காரணமாக உடல் எடை அதிகரிக்கின்றது என்று கருதுகின்றனர். மேலும், உடல் பருமனானவர்கள் சோம்பேறிகள், தன்னம்பிக்கை குறைவானார்கள் என்று கருதப்படுகின்றனர். உணவு பழக்கமும், உடற்பயிற்சியின்மையும் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தாலும், அதைத் தாண்டியும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

சிலர் என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடையே வைக்க மாட்டேங்குது என்று புலம்புவார்கள். அதற்கு அவர்கள் உடலின் மெட்டபாலிசம் செயல்பாடுதான் காரணம். சிறிய செயல்பாட்டுக்கும் கூட அவர்களுக்கு அதிக கலோரி செலவழிக்கப்படுகிறது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பது இல்லை. இதுவும் நல்லதுக்கு இல்லை. இவர்களுக்கு கொழுப்பைக் காட்டிலும் தசைகள் எரிக்கப்படுவது பிரச்னைக்கு வழிவகுத்துவிடும்.

உடல் பருமன் என்பது பெரியவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது என்று பலரும் கருதுகின்றனர். இது தவறு... எந்த வயதினருக்கும் உடல் பருமன் பிரச்னை ஏற்படலாம். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு உடல் பருமன் காரணமாக மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை.

மரபியல் ரீதியாக உடல் பருமன் ஏற்படலாம். அதற்காக அப்பா, தாத்தா உடல் பருமனாக இருந்ததால் பிள்ளை, பேரன் உடல் பருமனானவராகத்தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. வாழ்வியல் முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும்.

உடல் உழைப்பு குறைவுதான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்று கூற முடியாது. இருப்பினும் அதுவும் ஒரு காரணம்தான். உடல் உழைப்பு இன்மை காரணமாக கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது.