பீதியை ஏற்படுத்தும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ்!

 
Covid

டெல்டாவை விட மிக வேகமாக பரவும், மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய கொரோனா வைரஸ் கிருமியை தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் 106 என்ற அளவில் இருந்த கொரோனா தொற்று 1200ஐ தாண்டிய சூழலில் இந்த கண்டுபிடிப்பு உலகையே கவலைகொள்ளும் வகையில் உள்ளது.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை திடீரென்று 10 மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கவே, என்ன மாதிரியான தொற்று என்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது புதிய உருமாறிய வைரஸ் கிருமியைக் கண்டறிந்துள்ளனர். இதற்கு B.1.1.529 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) புதிய கிரேக்க மொழியிலான பெயரை உலக சுகாதார நிறுவனம் சூட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிறழ்வு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அதன் பரவல் அச்சம் அளிக்கும் வகையில் உள்ளதால் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வைரஸ் 10 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. டெல்டா இரண்டே பிறழ்வுகளைக் கொண்டதாக இருந்தது. பீட்டா வைரஸே மூன்று பிறழ்வுகள் கொண்டதாக இருந்தது. இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் திறமையாக மிக வேகமாக பரவுவதுடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி பாதுகாப்பை சீர்குலைக்கிறது. இதன் தீவிரத் தன்மை வரும் நாட்களில் வெளிப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பீட்டா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் இருந்துதான் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டதால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த சூழலில் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்த வைரஸ் இந்தியாவுக்கு பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், மீண்டும் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.