சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா?

 
Diabetes

சர்க்கரை நோய் என்பது வாழ்வியல் குறைபாடு நோய் ஆகும். இன்சுலின் சுரப்பது குறைவது, இன்சுலின் செயல் திறன் குறைவாக இருப்பது ஆகியவற்றால் ஏற்படுவது டைப் 2 டயாபடீஸ் ஆகும். இதை வாழ்வியல் மாற்றங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம், சிலருக்கு பழைய நிலைக்குத் திரும்பவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், டைப் 1 சர்க்கரை நோய் என்றால் அதைக் குணப்படுத்த முடியாது என்பதே உண்மை.

டைப் 2 சர்க்கரை நோய் ஏற்பட்டால் பயப்பட வேண்டியது இல்லை. ரத்தத்தில் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் எடுக்க வேண்டும். தேவை எனில், மருத்துவர் பரிந்துரைத்தால் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளலாம்.

இதனுடன் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, டயட் பின்பற்ற வேண்டும். சில டயாபடீஸ் மாத்திரைகளை உடல் எடைக்கு வழிவகுத்துவிடும். இதுவும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, குணப்படுத்த உதவியாக இருக்கும்.

சர்க்கரை நோய் வந்தால் முதலில் சரிவிகித சத்தான உணவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும், இப்படி செய்யும் போது உடலில் உள்ள கொழுப்பு கரையும். உடல் எடை குறையும். இதனால் சுரக்கும் இன்சுலின் போதுமானதாக மாறிவிடும். ஊட்டச்சத்து மிக்க உணவும் உடற்பயிற்சியும் கொழுப்பு கரைவதும் இன்சுலினை ஆற்றல் மிக்கதாக மாறும். டயட் மூலம் குறைவான அளவில் ரத்தத்தில் குளுக்கோஸ் கலப்பதால், அது போதுமானதாக மாறும்.

உடல் எடை குறைக்க, கலோரி அளவைக் குறைக்க கார்போஹைட்ரேட் உணவைக் குறைக்க வேண்டும். ஆரோக்கியமான கொழுப்பு சத்து மிக்க உணவை எடுக்கலாம். அதிக அளவில் காய்கறிகள், சர்க்கரை அளவு குறைவான பழங்களை சாப்பிடலாம். முழு தானியங்களை எடுத்துக்கொள்ளலாம். புரதச் சத்து மிக்க உணவுகளை எடுக்க வேண்டும். இனிப்புகள், ஆல்கஹால் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

இதைக் கடுமையாக பின்பற்றி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயால் வரக்கூடிய பின் விளைவுகள் தவிர்க்கப்படும். உடல் பழைய நிலைக்குத் திரும்பலாம்! அதே நேரத்தில் டைப் 1 சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. அவர்களுக்கு இன்சுலின் முற்றிலுமாக சுரப்பது இல்லை. எனவே, காலம் முழுக்க அவர்கள் இன்சுலின் ஊசி எடுக்க வேண்டும்.