வெங்காயத்தின் 8 மருத்துவ பலன்கள்!

 

வெங்காயத்தின் 8 மருத்துவ பலன்கள்!

வெங்காயம் உரிக்க உரிக்க கண்ணீரை வரவழைத்தாலும் நம்முடைய உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. உணவின் சுவையை மட்டுமின்றி நம்முடைய ஆரோக்கியத்தையும் கூட்டும் தன்மை வெங்காயத்துக்கு உண்டு.

வெங்காயத்தில் வைட்டமின் சி, பி9, பி6, பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

வெங்காயத்தின் 8 மருத்துவ பலன்கள்!

1) வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட்கள் நம்முடைய உடலில் உள்ள டிரை கிளசரைட் என்ற கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. ரத்தம் கட்டியாவதைத் தடுத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள ஃபிளவனாய்டுகள் இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

தொடர்ந்து வெங்காயத்தை எடுத்து வந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

2) வெங்காயத்தில் 25 விதமான ஆன்டிஆக்ஸிடண்ட் உள்ளது. சிவப்பு வெங்காயத்தில் அதன் நிறத்துக்கு காரணமான anthocyanins என்ற ஆன்டிஆக்ஸிடண்ட் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.

3) பூண்டு, வெங்காயம் போன்ற உணவில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள கந்தகம் மற்றும் ஃபிளவனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கின்றன. குறிப்பாக வயிறு, இரைப்பை, சினைப்பைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை வெங்காயம் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4) வெங்காயச் சாறுடன் தேன் அல்லது குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

5) ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு.

6) வெங்காயம் மிகச் சிறந்த ஆண்டி பாக்டீரியல் மூலக் கூறுகளைக் கொண்டுள்ளது. இதை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் இ.கோலி உள்ளிட்ட பல்வேறு பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பிக்கலாம். வெங்காயத்தில் உள்ள Quercetin என்ற சத்து பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படுகிறது.

7) வெங்காயத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தைத் தூண்டுகிறது. மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து காக்கிறது.

8) வெங்காயத்தை ஒரு மண்டலத்துக்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணியும். கொழுப்பு கரையும். மூளை செயல்திறன் மேம்படும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.