காய்ச்சலுக்கு வீட்டு சிகிச்சை!

 
fever

ஒருவரின் இயல்புநிலை உடல் வெப்பநிலை அதிகரிப்பதைக் காய்ச்சல் என்கிறோம். காய்ச்சல் என்பது நோய் இல்லை. அது வெறும் அறிகுறி மட்டுமே. வழக்கமாக ஏற்படும் காய்ச்சல்கள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது. ஒன்றிரண்டு நாட்களிலேயே சரியாகிவிடும். ஆனால், 2, 3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், அதிக காய்ச்சல் இருந்தால் மருத்துவ உதவியை நாடுவது மிக மிக அவசியம்.

காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியது அதிக அளவில் தண்ணீர் அருந்துவதுதான். இது உடலுக்கு நீர்ச் சத்தைக் கொடுக்கும். வெந்நீர் அல்லது எலக்ட்ரோலைட் டிரிங்க்ஸ் அருந்தலாம். இதன் மூலம் காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் அது வெளியேற்றப்படும்.

காய்ச்சல் ஏற்படும்போது நம்முடைய உடலானது தொற்றுநோய் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. இந்த நேரத்தில் நம்முடைய உடலிலிருந்து அதிகப்படியான ஆற்றல் செலவாகும். எனவே, இந்த நேரத்தில் ஓய்வு கட்டாயம் தேவை.

காய்ச்சல் வந்தாலே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று இல்லை. பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை முதல், இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.

காய்ச்சல் குணமாக மிளகு கஷாயம் அருந்தலாம். 10 - 12 மிளகை எடுத்து பொடித்து, கால் கிளாஸ் அளவுக்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் அடுப்பை அணைத்து, தேவை எனில் சிறிது தேன் அல்லது பனை வெல்லம் கலந்து குடிக்கலாம். இப்படிச் செய்தால் இருமல், காய்ச்சல் உடனடியாக சரியாகும்.

கைப்பிடி அளவு மிளகை எடுத்து வாணலியில் போட்டு நன்கு வறுக்க வேண்டும். மிளகு சிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். பருப்பு  கடையும் மத்து வைத்தும் பொடித்துக்கொள்ளலாம்.

இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். நீர் பாதியாக வற்றியதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். ஆறியதும் இதிலிருந்து கால் டம்ளர் குடிக்க வேண்டும். தேவையெனில் பனை வெல்லம் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த கஷாயத்தை குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

மிளகு, இஞ்சி, சீரகம், துளசி, கற்பூரவல்லி போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

பப்பாளி இலை அல்லது கொய்யா இலை அல்லது இந்த இரண்டையும் சேர்த்துப் போட்டு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வரும். ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.