உடல் எடையைக் குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்!

 
Coconut Oil

நம்முடைய பாரம்பரிய எண்ணெய்களுள் ஒன்று தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெய் தொடர்பாக பரவிய பல்வேறு வதந்திகள் காரணமாக சமையலுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். பலரும் தலைக்கு தேய்க்கக் கூட தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதைக் கூட நிறுத்திவிட்டனர். உண்மையில் தேங்காய் எண்ணெய் கெடுதல் இல்லை என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இதயத்துக்கு மிகவும் நல்ல எண்ணெய் என்றும் கூட பரிந்துரைக்கின்றனர்.

தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் கொழுப்பை வேகமாக எரிக்கச் செய்யும். தேங்காய் எண்ணெய்யில் டிரைகிளசரைட் வகைகளில் நல்லதான மீடியம் செயின் டிரைகிளரைட் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது. கலோரியை அதிக அளவில் செலவழிக்க உடலைத் தூண்டுகிறது. இதன் காரணமாக உடல் எடை குறையும்.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது. இதன் காரணமாக கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கத் துணை செய்கிறது.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள மீடியம் செயின் டிரைகிளசரைட் உணவு அதிக அளவில் உட்கொள்வதைத் தடுக்கிறது. மீடியம் செயின் டிரைகிளசரைட் சிதைக்கப்படும்போது கீடோன்ஸ் என்ற உப பொருள் உண்டாகிறது. அது மூளைக்கு உடலுக்குத் தேவையான உணவு கிடைத்துவிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. பசியைத் தூண்டும் கிரலின் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது.

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் தேங்காய் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைச் சருமத்தில் பூசுவது சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.

அதே போன்று முடி கருகருவென்று நீளமாக வளரவும் துணை செய்கிறது. முடியின் வளைந்துகொடுக்கும் தன்மை மற்றும் உறுதித் தன்மையை அதிகமாக்குகிறது. முடிக்கு நல்ல கண்டீஷனராகவும் செயல்படுகிறது.

தேங்காய் எண்ணெய்யில் பாக்டீரியாவை அழிக்கும் தன்மை உள்ளதால் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும். ஆயில் புல்லிங் செய்ய ஏற்ற எண்ணெய் தேங்காய் எண்ணெய்தான். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி கொப்பளித்து வந்தால் பற்சிதைவு, ஈறுகளில் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. அதே போன்று செரிமானக் குறைபாட்டையும் போக்கும்.