தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் ஆச்சரிய பலன்கள்!

 
banana

வாழைப் பழம் மிகவும் சுவையானது, ஆரோக்கியமானது... அனைத்துக்கும் மேலாக எளிதில் கிடைக்கக் கூடியது. வாழைப்பழம் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாக உள்ளது. இது செரிமானத்தைச் சீராக்குகிறது, இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கிறது... இன்னும் பல ஏராளமான நன்மைகளைத் தருகிறது.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கக் கூடிய ஆரோக்கிய பலன்களைப் பற்றி பார்க்கலாம்.

126 கிராம் பழத்தில் 112 கலோரி உள்ளது. புரதம் 1 கிராம், கார்போஹைட்ரேட் 29 கிராம், நார்ச்சத்து 3 கிராம் உள்ளது. ஒரு நாள் தேவையில் 12 சதவிகித வைட்டமின் சி, 7 சதவிகித ரிபோஃபிளேவின், 6 சதவிகித ஃபோலேட், 11 சதவிகித தாமிரம், 10 சதவிகித பொட்டாசியம், 8 சதவிகித மக்னீஷியம் உள்ளது.

வாழைப் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். வாழைப் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தின் போது ஜெல் வடிவமாக மாறும் தன்மை கொண்டது. உணவு உட்கொண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பதைத் தடுத்து சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உணவு விரைவாக காலியாகாமல் கொஞ்சம் கொஞ்சமாக செரிமானம் ஆகும் வகையில் உதவுகிறது. இதன் மூலம் பசி ஏற்படுவது குறைகிறது.

வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.

பொட்டாசியம் காரணமாக ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவது சிறுநீரகத்துக்கும் நல்லது. ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு தினமும் வாழைப்பழம் கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில் அவர்கள் சிறுநீரகம் செயலிழப்பு தாமதம் ஆனதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மக்னீஷியமும் இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்க உதவுகிறது. மக்னீஷியம் பற்றாக்குறை ரத்த அழுத்தம் அதிகரிக்க, இதய நோய் வரக் காரணமாக உள்ளது.

இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்பது சர்க்கரை நோய் வருவதற்கு வழிவகுக்கும். கொஞ்சம் காய்வெட்டாக இருக்கும் வாழைப்பழத்தைச் சாப்பிடுவது இன்சுலின் செயல்திறனை மேம்படுத்த உதவும். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

வாழை ஊட்டச்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்த பழமாகும். இதில் உள்ள ஃபிளவனாய்டு ரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் இதய நோய் மற்றும் செரிமான மண்டல நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன.