மாதவிலக்கு வலியைக் குறைக்கும் இஞ்சி!

 
Ginger

உணவாக, மருந்தாகப் பயன்படும் பொருள் இஞ்சி. ஃபிரஷ் மற்றும் உலர வைத்து சுக்காகவும் பயன்படுத்தலாம். செரிமானக் குறைபாடு என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது இஞ்சி. இது செரிமானக் குறைபாட்டை சரி செய்வதோடு. பல்வேறு உடல் நலப் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற வேதிப் பொருள் உள்ளது. இதுதான் செரிமானக் குறைவு, வாந்தி, குமட்டலைத் தடுக்க உதவுகிறது. மேலும் சாதாரண சளி, காய்ச்சலை போக்குகிறது.

எனவே, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மார்னிங் சிக்னஸ் எனப்படும் வாந்தி, குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இஞ்சி தீர்வாக இருக்கிறது. மற்ற ரசாயனங்கள் போல இல்லாமல் இயற்கை முறையில் வாந்தி, குமட்டலைத் தடுக்கும் என்பதால் இஞ்சி மிகவும் பாதுகாப்பானதாகும்.

தினமும் இஞ்சி சாறு அருந்தி வந்தால் உடல் எடை வேகமாகக் குறையும். மேலும் இது கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மாதவிலக்கு காரணமாக ஏற்படும் அதீத வலியைக் குறைக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. இஞ்சியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிப்பதால் அடி வயிற்று வலி குறையும். அதேபோல் உடல் வலியும் குறையும். புத்துணர்ச்சியாக இருக்கும். இது மாதவிடாய் தள்ளிப்போதலையும் தடுக்கும்.

இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால் எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது. ஆரம்பநிலை ரூமட்டாய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி விளங்குகிறது.

பல்வேறு வழிகளில் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டதாக இஞ்சி விளங்குகிறது. இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற பொருள் மிகவும் ஆற்றலுடன் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. குடல் புற்றுநோயாளிகளுக்கு தினமும் 2 கிராம் அளவுக்கு இஞ்சி கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. 28 நாள் முடிவில் புற்றுநோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

புற்றுநோய் மட்டுமின்றி, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு பாக்டீரியா தொற்றையும் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. இஞ்சி சாறு, இஞ்சி டீ அருந்தும் போது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அது அழிக்கிறது. இதன் மூலம் பல் ஈறு தொடர்பான பிரச்னைகளுக்கான வாய்ப்பு குறைகிறது. தலைவலி உள்ள நேரத்தில் இஞ்சி டீ அருந்துவது நல்ல நிவாரணத்தைத் தரும்.