வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும் உணவுகள்!

 
Gas

ஒப்புக்கொள்கின்றீர்களோ இல்லையோ எல்லோருமே வாயுத் தொந்தரவால் அவதியுற்றிருப்போம். நாம் உட்கொள்ளும் உணவு செரிமான மண்டலத்தில் சிதைக்கப்பட்டு, செரிமானம் செய்யப்படும்போது துணைப் பொருளாக வாயுக்கள் உருவாகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமா 14 முறையாவது வாயு வெளியேறும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலருக்கு இதுவே மிகப்பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும். அதற்காக வாயு வெளியேறுவதே தவறு என்று கூற முடியாது. அப்படி வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும் சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

பயிறு வகைகள் சாப்பிடுவது வாயுத் தொந்தரவை ஏற்படுத்திவிடும். பயிறு, பருப்பு வகைளில் சிக்கலான ராஃபினோஸ் (raffinose)  கார்போஹைட்ரேட் உள்ளது. இது செரிமானம் ஆகக் கடினமானதாக இருக்கிறது. சிறு குடலிலிருந்து பெருங்குடலுக்குச் செல்லும் நேரத்தில் வயிற்றில் உள்ள பாக்டீரியா அதை சிதைத்து ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு ஆக பிரிக்கிறது. இது ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. அதிக வாயுத் தொல்லை உள்ளவர்கள் பயிறு, பருப்பு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

பால் பொருட்கள் கூட வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும். பாலில் லாக்டோஸ் என்ற சர்க்கரை உள்ளது. இது செரிமானம் ஆகும்போது வாயு உருவாகிறது. லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். பால் பொருட்கள் அலர்ஜி உள்ளவர்கள் அதற்கு மாற்றாய் சோயா பாலை எடுத்துக்கொள்ளலாம்.

முழு தானியங்களில் நார்ச்சத்து, ராஃபினோஸ், ஸ்டார்ச் உள்ளிட்டவை உள்ளன. இவை செரிமானம் ஆக கடினமான பொருட்கள் ஆகும். இவை எல்லாம் பெருங்குடலில் பாக்டீரியாவால் சிதைக்கப்படுகின்றன. அதன் துணைப் பொருளாகக் காற்று உருவாகிறது. தானியங்களில் அரிசி மட்டுமே வாயுத் தொந்தரவை ஏற்படுத்துவது இல்லை.

சில காய்கறிகள் கூட வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும். காலிஃபிளவர், கோஸ், ப்ரக்கோலி உள்ளிட்டவை வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும். சிக்கலான கார்போஹைட்ரேட், ராஃபினோஸ் உள்ள காய்கறிகள் வாயுத் தொந்தரவை ஏற்படுத்துகின்றன.

கார்பனேட்டட் குளிர்பானங்கள் அருந்துவது வாயுத் தொந்தரவை அதிகரிக்கச் செய்யும். கார்பனேட்டட் பானத்தில் நாம் குடிக்கும் போது எவ்வளவு காற்று உள்ளே செல்கிறதோ, அது செரிமான மண்டலத்தின் கடைசி பகுதி வழியாகவே வெளியேறும். சிலருக்கு கொஞ்சம் ஏப்பமாகவும் வெளிப்படலாம். சோடா, கார்பனேட்டட் பானங்களுக்குப் பதில் ஜூஸ், காபி, டீ, தண்ணீர் அருந்துவது வாயுத் தொந்தரவைக் குறைக்கும்.

சுவிங்கம் மெல்வது கூட வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும். சுவிங்கத்தில் வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும் பொருள் எதுவும் இல்லை. ஆனால், மென்றுகொண்டே இருப்பதால் அதிக அளவில் காற்றையும் உடலுக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். அது வாயுத் தொந்தரவாக வெளிப்படும்.