உணவு உட்கொள்வதுதான் உடல் எடை அதிகரிக்கக் காரணமா?

 
obesity

நான் சரியாக சாப்பிடுவது கூட இல்லை, ஆனாலும் உடல் எடை அதிரிகத்துக்கொண்டே செல்கிறது என்று பலரும் புலம்புவது உண்டு. உடல் பருமனால் அவதியுறும் பலரும் சொல்லும் காரணம் இதுதான். உண்மையில் உடல் பருமன் உள்ள பலருக்கு அதீத பசி போன்ற பிரச்னை இருப்பதும் இல்லை. அப்படி இருக்க உடல் எடை ஏன் அதிகரிக்கிறது என்ற கேள்வி எழலாம்.

உடல் பருமன் என்பது உடலின் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடு என்று கூறலாம். உணவு என்பது அதில் ஒரு சின்ன விஷயம்தான். பொதுவாக 70 சதவிகித உடல் பருமன் என்பது மரபியல் ரீதியாக வரக் கூடியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடை அதிகரிக்க ஹார்மோன் சமச்சீரின்மை, மெட்டபாலிசம் மாறுபாடு, உடல் உழைப்பு குறைவு, உணவு உட்கொள்வதில் மாறுபாடு, தூக்கம், மன அழுத்தம், சுற்றுச்சூழல் காரணி, சில வகையான மாத்திரை - மருந்துகள் எடுத்துக்கொள்வது என பல்வேறு காரணங்கள் உள்ளன.

கர்ப்பம் தரிப்பது, கர்ப்ப காலம், பிரசவத்துக்கு பிறகான காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றம் கூட உடல் பருமனை ஏற்படுத்திவிடும். உணவு மாறுபாடும், உணவு உட்கொள்வதும் கூட உடல் பருமன் ஏற்படக் காரணமாக இருக்கிறது. ஆனால், அது மட்டுமே காரணமாக இல்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேவையான அளவு கலோரியைக் காட்டிலும் அதிக கலோரி எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். தேவையைக் காட்டிலும் குறைவாக எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும். ஆனால், தேவையான அளவு எவ்வளவு என்பதுதான் கேள்வியாக உள்ளது. எல்லோருக்கும் ஒரு நாளைக்குத் தேவையான கலோரி என்பது ஒன்றாக இருக்காது. வயது, பாலினம் உள்ளிட்டவை அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும்.

நம்முடைய உடல் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டது. உடல் எடையைக் குறைக்கிறேன் என்று மிகக் கடுமையான டயட் பின்பற்றினால் நம்முடைய உடல் நம்மை விட புத்திசாலித்தனமாக யோசித்து மெட்டபாலிசம் விகிதத்தைக் குறைத்துவிடும். அதாவது வழக்கமாக தேவைப்படுவதைக் காட்டிலும் மிகக் குறைவான கலோரியையே அது பயன்படுத்தும். நம்முடைய உடல் மிகக் குறைவான கலோரியை பயன்படுத்துகிறது என்றால் உடல் எடை குறைப்பு என்பது சாத்தியம் இல்லாமல் ஆகிவிடும்.

உடலுக்குத் தேவையான அளவு கலோரியைக் கொடுக்கவில்லை என்றால் உடல் தன்னுடைய அன்றாட செயல்பாட்டுக்கு கொழுப்பைக் கரைக்கும் என்று நினைப்போம். ஆனால், உடல் எளிய தசைகளை எரித்து கலோரியாக மாற்றி பயன்படுத்தும். எனவே தான் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். எனவே, உடல் எடையைக் குறைக்க டயட் மட்டும் தீர்வு என்று இல்லாமல் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ள வேண்டும். ஹார்மோன் குறைபாடு, சமச்சீரின்மை இருந்தால் அதையும் சரி செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்!