தூக்கம் பிரச்னை உள்ளவர்களுக்கு தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படலாம்!

 
COVID-19

சர்க்கரை நோய் உள்ளிட்ட சில பாதிப்புகள் உள்ளவர்கக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறி வந்தனர். இந்த சூழலில் குறட்டை உள்ளிட்ட தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கும் தீவிர கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனின் மருத்துவ ஆய்வு இதழலான JAMA நெட்வொர்க் ஓப்பனில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. ஸ்லீப் ஆப்னியா மற்றும் தீவிர குறட்டை நோய் போன்ற தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அது மிகத் தீவிர பாதிப்பாக வெளிப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3.6 லட்சம் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ளீவ்லேண்ட் க்ளீனிக்கல் லேர்னர் மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில் பங்கேற்ற கொரோனா நோயாளிகளில் 31 சதவிகிதம் பேருக்கு தூக்கம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இதனுடன் உடல் பருமன், இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், புகைப்பழக்கம் இருந்தால் அவர்களின் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

தூக்கம் தொடர்பான வியாதி இருந்தாலே அவர்களுக்கு கொரோனாத் தொற்று தீவிரமாக வெளிப்படுமா என்று உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும் தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு இன்ஃபிளமேட்டரி பிரச்னை இருப்பதால் அதனுடன் கொரோனா தொற்று இணையும் போது பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கொரோனா யாருக்கு எல்லாம் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அவர்கள் விரைவாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் பிரச்னை தீவிரமாகும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. இவர்கள் எல்லோரும் கொரோனாவுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இதன் மூலம் மருத்துவமனையில் ஐசியு-வில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.