உடல் எடை குறைக்க டயட் அல்லது உடற்பயிற்சி... எது பெஸ்ட்?

 
Weight Loss

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். நம்முடைய உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதன் மூலம் உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருவதிலிருந்து தப்பிக்க முடியும். உடல் எடையைப் பராமரிக்க உடற்பயிற்சியா அல்லது உணவுக் கட்டுப்பாடா எது சிறந்தது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

டயட்டும் உடற்பயிற்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறலாம். எவ்வளவு கலோரியை எடுத்துக்கொண்டோம், எவ்வளவு கலோரியை செலவழித்தோம் என்ற வரவு செலவு கணக்குத்தான் டயட்டும் உடற்பயிற்சியும். ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்பு திட்டம் என்பது இந்த இரண்டையும் சேர்ந்ததாகத்தான் இருக்க முடியும். சரியான உணவு இன்றி முழுக்க முழுக்க உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினால் சேர்ந்து போய்விடுவோம். நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்துவிடும். அதுவே பல பாதிப்புகளுக்கு காரணமாகவிடலாம். எனவே, இந்த இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பது அவசியம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான முறையில் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும். தேவையான அளவு சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் நன்கு உடற்பயிற்சி செய்து கலோரியை செலவழித்துவிட வேண்டும்.

உணவு விஷயத்துக்கு 80 சதவிகிதம் மெனக்கெட வேண்டும். என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கவனம் செலுத்த வேண்டும். 20 சதவிகிதம் உடற்பயிற்சிக்கு செலவழித்தால் போதும்.

உடல் எடையைக் குறைக்க வாக்கிங், ஜாகிங், யோகா போன்றவற்றைத் தினமும் விடாமல் செய்ய வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது மட்டுமே உடல் எடை குறையும்.

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகளுடன் தசைகளை உறுதியாக்கும் வெயிட் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். ஜிம்முக்கு சென்று செய்ய முடியாவிட்டால், வீட்டிலேயே வெயிட் பயிற்சியை செய்ய வேண்டும்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதை வழக்கமாக மாற்ற வேண்டும்.

அதிக கலோரி கொண்ட எண்ணெய்யில் பொறித்த உணவுகள், ஜங்க் ஃபுட்களை தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை வேகமாக குறைக்க பல கடின உடற்பயிற்சி யுக்தி, டயட் முறைகள் உள்ளன. எந்த ஒரு கடினமான உடல் எடை குறைப்பு வழிமுறையோ, டயட் திட்டமோ ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவாது. உடல் எடை குறைப்பு என்பது நிலையான, நீடித்த செயல்முறையின் மூலம் கிடைக்கும் பலன் ஆகும். அதற்கு குறுக்கு வழிகள் எதுவும் உதவாது. இலக்கை நோக்கிய பயணத்தில் உறுதியாக இருந்தால் வெற்றி பெறலாம்.