ஆணுறை 100 சதவிகிதம் பாதுகாப்பானது தானா?

 
condoms

தேவையற்ற கருத்தரித்தல், பால்வினை நோய்கள் தவிர்ப்புக்கு சிறந்த சாதனமாக ஆண்களுக்கான ஆணுறை கருதப்படுகிறது. ஆணுறுப்பிலிருந்து வெளிப்படும் விந்தணுக்களைத் தடுத்து நிறுத்தி, கருத்தரித்தல் நடைபெறாமல் தடுக்கும் வேலையை ஆணுறை செய்கிறது. மேலும், தாம்பத்திய உறவு மூலம் பரவும் பல்வேறு பால்வினை நோய்கள் பரவலையும் தடுக்கிறது. ஆனால், ஆணுறை 99 சதவிகிதம் பேருக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது. ஒரு சில சதவிகிதம் பேருக்கு அது பிரச்னையாக மாறிவிடலாம். ஆணுறை அணிவதில் சில பின்விளைவுகளும் உள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

ஆணுறை லேட்டக்ஸ் என்ற வகையான ரப்பர், பாலியூரிதீன், பாலிசோபிரீன் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது. இதில் லேட்டக்ஸ் சற்று விலைக் குறைவு இதுவே அதிக அளவில் விற்பனை ஆகிறது. மிக முக்கியமாக தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் வகையில் இவை தயாரிக்கப்படுகின்றன. இதில் லேட்டக்ஸ் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அரிப்பு, படை நோய் உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டால் பாலியூரிதீன் போன்ற சற்று விலை அதிகமான ஆணுறையைப் பயன்படுத்துவது நல்லது.

ஆணுறைகள் தாம்பத்திய உறவின் மகிழ்ச்சியைக் கூட்ட அதிக மெல்லியதாக தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் இதைப் பயன்படுத்துவது உணர்திறன் குறைவதாக சிலர் புகார் தெரிவிக்கின்றனர். தாம்பத்திய உறவின் மகிழ்ச்சி, இன்பம் தடைப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆணுறை 100 சதவிகிதம் பாதுகாப்பானது இல்லை. ஆணுறை பயன்படுத்தும்போது அது கிழிந்து விந்தணு வெளிப்படலாம். இதன் காரணமாக பால்வினை நோய் பரவல் ஏற்படலாம். இதற்கு அதிக உராய்வே காரணம். எனவே, பயன்படுத்துவதற்கு முன்பு ஏதாவது ஒரு பகுதியில் பலவீனமாக இருக்கிறதா பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சில நேரங்களில் விந்தணு வெளிப்படும்போது ஆணுறை தனியாகக் கழன்று வெளிப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய் பரவல் வாய்ப்பு உள்ளது.

எல்லோருக்கும் ஆணுறை ஏற்றதாக இருக்கும் என்று இல்லை. ஒவ்வாமை போன்ற பிரச்னை உள்ள தம்பதியர்களில் பெண்கள் வீண் கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்கக் கர்ப்பம் தவிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அல்லது மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி வேறு வகையான கருத்தரிப்பு சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.