பன்றிக்காய்ச்சல் அச்சுறுத்தல்... அறிகுறிகள், தவிர்க்கும் வழிகள் என்ன?

 
swine flu

கோயமுத்தூரில் இரண்டு பேருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், மாவட்ட நிர்வாகம் அது பன்றிக் காய்ச்சல் இல்லை, சாதாரண நிமோனியா என்று விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா அச்சம் இன்னும் விலகாத சூழலில் பன்றிக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பன்றிக் காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது, எப்படி பரவுகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

2009ம் ஆண்டு தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்த பெயர் பன்றிக் காய்ச்சல். உலகமே இப்போது பன்றிக் காய்ச்சலைக் கண்டு அஞ்சியது. ஆனால், நல்ல வேளையாக அதன் பரவல் தடுத்து நிறுத்தப்பட்டது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்றிக் காய்ச்சல் பெருந்தொற்று அச்சம் நீங்கியதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றும் என பன்றிக் காய்ச்சல் பரவல் தொடர்பான செய்தி வெளியாகும். அதன் பிறகு அது கட்டுப்படுத்தப்படும்.

பன்றிக் காய்ச்சல் பன்றிகளில் இருந்து பரவுவது இல்லை. எச்1என்1 என்ற வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு காற்று மூலம் இந்த வைரஸ் பரவும். மூக்கு, தொண்டை, நுரையீரலில் தங்கும் வைரஸ் அங்கிருந்து தன்னுடைய பாதிப்பை வெளிப்படுத்தும். மற்றபடி பன்றிக் கறி உண்பதால் எல்லாம் இந்த வைரஸ் பரவுவது இல்லை.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டையில் புண், மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவத்தல், கண்களில் இருந்து நீர் வடிவது, உடல் வலி, தலைவலி, சோர்வு, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

சளி, காய்ச்சல், உடல் வலி நீடித்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சை பெறாமல் விட்டால் இதுவும் கொரோனா போல் சுவாசித்தலில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் நெஞ்சு வலி, வலிப்பு போன்ற பிரச்னை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா, இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பல நேரங்களில் பன்றிக் காய்ச்சல் தானாகவே சரியாகிவிடும். மிக மோசமான நிலையை அடையும்போது அதற்கு மருந்துகள் வழங்கப்படும். டேமிஃப்ளு போன்ற வைரஸ் எதிர்ப்பு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

வைரஸ் தொற்று பாதிப்பைத் தவிர்க்க நன்கு ஓய்வெடுக்க வேண்டும். அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். சூப், ஜூஸ், இளநீர் அருந்தும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரணிகள் எடுக்கக் கூடாது.

பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க, கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். சுத்தமில்லாத கைகளைக் கொண்டு மூக்கு, வாய், கண்களைத் தொட வேண்டாம். கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.  பன்றிக் காய்ச்சல் இருந்தால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லக் கூடாது.