மாரடைப்பின் அறிகுறியை வெளிப்படுத்தும் உறுப்புகள்!

 
Heart Checkup

உலகம் முழுக்க மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் பாதிப்பு மாரடைப்பு. 2019ம் ஆண்டுக் கணக்கு படி உலக அளவில் 17.9 மில்லியன் மக்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உலக ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் இது 32 சதவிகிதம்.

மாரடைப்பு ஏற்படத் தவறான வாழ்வியல் முறை, உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை, மரபியல் என பல்வேறு காரணங்கள் உள்ளன. கொரோனாவுக்குப் பிறகு இந்த பட்டியலில் கொரோனா தொற்றும் இடம் பெற்றுவிட்டது. மாரடைப்பு என்றால் நெஞ்சு பகுதியில் ஏற்படும் வலி என்று மட்டுமே பலரும் நினைக்கின்றனர். உண்மையில் மாரடைப்பு அறிகுறிகள் உடலின் ஐந்து பகுதிகளில் வெளிப்படலாம்.

நெஞ்சு: நெஞ்சு பகுதியில் ஏற்படும் அறிகுறி மிக முக்கியமானது. நெஞ்சு பகுதியில் வலி, அழுத்தம், பாரம், அசௌகரியம் போன்றவை மாரடைப்பாக இருக்கலாம். சிலருக்கு இந்த வலி ஒரு சில நிமிடங்கள் நீடித்து மறைந்துவிடும். அப்படி வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

சிலருக்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு முதுகுப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும். மாரடைப்பு ஏற்பட்ட ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே முதுகு பகுதியில் அதிக அளவில் அறிகுறிகள் தென்பட்டதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தெரிவிக்கிறது.

தாடைப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும். சிலர் பல் வலி என்று நினைத்துக் கொள்வார்கள். இதுவும் பெண்கள் மத்தியில் அதிகம் காணப்படும். நெஞ்சு பகுதியில் அசௌகரியம், அதனுடன் தாடை வலி இருந்தால், சுவாசத் திணறல், வியர்வை போன்ற அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பாக இருக்கலாம்.

மாரடைப்பின் அறிகுறி சில நேரங்களில் கழுத்துப் பகுதியிலும் பிரதிபலிக்கலாம். இதய ரத்த நாளத்துக்கான ரத்த ஓட்டம் தடைப்படும் போது நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் வலி கழுத்து வரை நீடிக்கும். கழுத்துப் பகுதியில் இறுக்கம், வலி போன்ற பிரச்னை இருந்தால் மாரடைப்பாக இருக்கலாம்.

கழுத்துப் பகுதியில் பரவிய வலி தோள்பட்டை, இடது கை புஜம் வரை இறங்கும். சிலர் தோள்பட்டைதான் வலிக்கிறது என்று அஜாக்கிரதையாக இருந்துவிடுவர். இடது தோள்பட்டை, இடது கை, கழுத்து வலி இருந்தால் மாரடைப்பாக இருக்க வாய்ப்பு அதிகம். அதே போல் இடது கையில் தாங்க முடியாத திடீர் வலி, கையை தூக்க முடியாமை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.