இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் மாத்திரை!

 
Aspirin

கொரோனாவுக்குப் பிறகு இதய நோய்கள் ஏற்படுவது அதிகரிக்கத் தொடங்கியது. ரத்தம் உறைதல் பிரச்னை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சென்றவர்கள் ஏராளம். உயிரிழப்புகளும் ஏராளம் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர்க்க ஆஸ்பிரின் மாத்திரை பயன்படுத்தப்பட்டது. ஆஸ்பிரின் ரத்தம் கட்டியாவதைத் தடுத்து, சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் அது பரிந்துரைக்கப்பட்டது.

தற்போது, புதிய ஆய்வு ஒன்று ஆஸ்பிரின் தொடர் பயன்பாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில் வந்துள்ளது. ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இதய செயலிழப்பு ஏற்படலாம் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவாக உள்ளது. ஆஸ்பிரின் பயன்படுத்துவது 26 சதவிகிதம் அளவுக்கு இதய செயலிழப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம். இதனுடன் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை நோய், இதய நோய்கள் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று இஎஸ்சி ஹார்ட் ஃபெயிலியர் ஜர்னலில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.

இந்த ஆய்வை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஃபெரிபெர்க் பல்கலைக் கழகம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்த பல்கலைக் கழக ஆய்வாளர் கூறுகையில், "எங்களுடைய ஆய்வில் ஆஸ்பிரின் மாத்திரை பயன்படுத்துபவர்கள் மத்தியில் இதய செயலிழப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இது ஆரம்ப நிலைதான். இதை உறுதி செய்ய இன்னும் பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஆஸ்பிரினுக்கும் இதய செயலிழப்புக்கும் என்ன தொடர்பு, எதனால் செயலிழப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்" என்றார்.

இந்த ஆய்வில் 7698 பேர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களின் தோராயமான வயது 67. பங்கேற்றவர்களில் 34 சதவிகிதம் பேர் பெண்கள். பங்கேற்றவர்களில் 25 சதவிகிதம் பேர் ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வந்துள்ளனர். அதாவது, நான்கில் ஒருவர் ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வந்துள்ளார். 5.3 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் 1330 பேருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மாத்திரை பயன்படுத்தியதால் மட்டுமே இதய செயலிழப்பு ஏற்பட்டது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துவிடவில்லை. அவர்களின் வயது, பாலினம், உடல் எடை, பிஎம்ஐ, சிகரெட், மது பழக்கம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு விகிதம், ரத்தத்தில் கொலஸ்டிரால், கிரியாட்டினின், சர்க்கரை நோய், இதய நோய்கள், வேறு நோய்க்கு அவர்கள் எடுத்துக்கொண்ட மருந்துகள் என பலவற்றையும் ஆய்வு செய்து, ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் 26 சதவிகிதம் பேருக்கு ஆஸ்பிரினால் இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்துள்ளனர்.