சிறப்பாக சிகிச்சை அளித்து கொரோனாவிலிருந்து உயிரை காப்பாற்றியதற்கு நன்றி- குணமடைந்தவரின் உருக்கமான கடிதம்

 

சிறப்பாக சிகிச்சை அளித்து கொரோனாவிலிருந்து உயிரை காப்பாற்றியதற்கு நன்றி- குணமடைந்தவரின் உருக்கமான கடிதம்

சிறந்த மருத்துவ சேவை வழங்கி உயிர் காத்ததாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து குணமடைந்தவர் நன்றிக் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதனை நன்றி பாராட்டி அம்மருத்துவமனை முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மருத்துவ கல்லூரியில் மதிப்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்! நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என் குடும்பத்தில் உள்ள நான்கு உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 11-8-2020 அன்று நானும் என் மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். என் மகனும், மாமியாரும் விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் உள்ள கோவிட் செண்டரில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறப்பாக சிகிச்சை அளித்து கொரோனாவிலிருந்து உயிரை காப்பாற்றியதற்கு நன்றி- குணமடைந்தவரின் உருக்கமான கடிதம்

எனக்கு கடுமையான இருமலுடன் கூடிய மூச்சுத்திணறல், இருமும்போது சளியுடன் ரத்தமும் வெளியேறியது உடனடியாக எனக்கு ஆக்ஸிஜன் வசதி ச் செய்து கொடுத்து மூச்சு விடுவதை சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இரண்டு வேளையும் நரம்பு வழியாக மருந்து செலுத்தி நோயிலிருந்து முற்றிலுமாக காப்பாற்றி விட்டனர். இதேபோல என் மனைவியையும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் பத்து பைசா கூட செலவில்லை. தனியார் மருத்துவமனையில் சேர்ந்து இருந்தால் பல லட்சங்களை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கும். மூன்று வேளையும் உயர்தரமான சத்தான சாப்பாடு, எங்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருந்தது போன்ற ஒரு உணர்வே இல்லை. சொந்த வீட்டில் இருந்தது போன்று இருந்தது. இரண்டு வேளையும் கிர்மி நாசினி தெளித்து துப்புறவு பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றியதுடன் உதவியும் செய்தது பாராட்டதக்கது. இரவும் பகலும் டாக்டர்கள், செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் உட்பட நோயாளிகளை செக் செய்து நன்கு பார்த்துகொண்டனர். செவிலியர்கள் அப்பா, அப்பா என அழைக்கும்போது என் மகள் என்னை அருகிலிருந்து கவனித்துக் கொண்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

உங்களுடைய நிர்வாக திறமைக்கு இது ஒரு மைல் கல். சிறப்பான, திறமையான ஆளுமையால் எங்களைப் போன்ற ஏழை உயிர்பிழைத்து செலவின்றி நிம்மதியாக வீட்டுக்கு திரும்பி செல்கின்றனர். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பிறகும் மருத்துவர்கள் இரண்டு முறை போன் செய்து நலம் விசாரித்து அறிவுரை வழங்கினர். தங்களது மருத்துவக் குழுவின் தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.