இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

 

 இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

’எதைக் கொடுத்தாலும் வலதுக்கையால்தான் கொடுக்கணும்’ என்று சின்னக் குழந்தையிலிருந்து சொல்லிக்கொடுத்திருப்பார்கள். இந்தப் பழக்கம் என்பது மிக ஆழமாக எல்லோரின் மனதிலும் பதிந்துவிட்டது. அதனால் பெரிய சோகம் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஒரு நல்ல பழக்கத்தைச் சொல்லிக்கொடுப்பதில் என்ன சோகம்… அது சரி யாருக்கெல்லாம் சோகம் என்று கேட்கிறீர்களா?

 இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

வேறு யாருக்கு இடது கை பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் சோகம். ஏன் தெரியுமா? இந்த உலகில் எது கண்டுபிடித்தாலும் அது வலதுகை பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் விதமாகவே உருவாக்கப்படுகின்றன.

டூ வீலரின் அமைப்பைப் பாருங்கள், வலது கையில்தான் ஆக்ஸிலேட்டர் இருக்கும்.

ஒரு கதவின் கைப்பிடியும் வலது கை பழக்கம் உள்ளவர்கள் எளிதாகத் திறக்கும்படியாகத் தான் பொருத்தியிருப்பார்கள்.

அவ்வளவு ஏன்… ஒரு சின்ன ஸ்க்ருவை டைட் செய்வது வலமிருந்து இடமாகத்தான் இருக்கும். அதை நீங்கள் இடதுகையால் திருகிப் பார்த்தால் அதன் வலி தெரியும்.

இப்படித்தான் இடதுகை பழக்கம் உள்ளவர்கள், ஹோட்டலுக்குச் சாப்பிட போனாலும் தண்ணீர் குழாயைத் திறப்பதும் சிரமம்தான்.

எனவே தான் இடது கை பழக்கம் உள்ளவர்கள் உரக்கச் சொல்கிறார்கள். இந்த உலகம் வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல.

இடதுகை பழக்கம் கொண்டவர்களின் சிறப்புகளைப் பகிரவும், அவர்களின் இயபுகளைப் பேசவும் இன்று (ஆகஸ்ட் 13) உலக இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

 இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

ஏன் இந்த இடது கை பழக்கம் ஒருவருக்கு ஏற்படுகிறது. பெருமூளையில் உள்ள வலது மற்றும் இடது பாகங்கள்தான் நம் உடலின் இயக்கதைக் கட்டுப்படுத்துகிறது. வலப்பக்க மூளை பாகம் இடப்பக்க உடல் பாகங்களையும் இடப்பக்க மூளை பாகம் வலப்பக்க உடல் பாகங்களை இயங்க வைக்கிறது. இதில் வலப் பக்க மூளை பாகம் அதிகம் செயல்படுபவர்கள் இடது கை பழக்கம் உள்ளவர்களாக மாறுகிறார்கள்.

இடதுகை பழக்கம் உள்ளவர்களில் மாபெரும் ஆளுமைகள் இருந்திருக்கிறார்கள் /இருக்கிறார்கள்.

நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட, போராடிய மகாத்மா காந்தியே இடக்கை பழக்கம் கொண்டவர்தான். நெப்போலியன், வின்செண்ட் சர்ச்சில், அலெக்ஸாண்டர், ஐன்ஸ்ட்டீன், பிடல் காஸ்ட்ரோ, சவுரங் கங்குலி, யுவராஜ் சிங் என எல்லாத் துறையிலும் புகழ்பெற்றவர்கள், சாதித்தவர்கள் இடக்கை பழக்கம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

குழந்தைகளின் இடக்கை பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அது ஒரு பழக்கம் மட்டுமல்ல உடல் அமைப்பின் வெளிப்பாடும்தான்.

 இந்த உலகம் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அல்ல – #LefthandersDay

எந்த கண்டுபிடிப்புகள் கண்டறியப்படும்போதும் இடக்கை பழக்கம் உள்ளவர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதையும் சேர்த்து யோசித்து, சின்னச் சின்ன மாறுதல் செய்வதும் அவர்களை இந்த உலகம் பொருட்படுத்துகிறது என்பதன் அடையாளம்.

சமூகத்தில் இடக்கை பழக்கம் உள்ளவர்களை வித்தியாசமாகப் பார்ப்பது இருக்கிறது. அது தேவையில்லாத ஒன்று. நம் பழக்க வழக்கங்கள் எவ்வளவு முக்கியம் என நினைக்கிறோமா… அதே அளவு ஒரு குறிப்பிட்ட பழக்கம் உள்ளவர்களின் மனதையும் புரிந்துகொள்வது முக்கியம்.

இன்னும் சொல்வதென்றால், வலக்கை பழக்கம் உள்ளவர்களை விடவும் இடக்கை பழக்கம் உள்ளவரின் அறிவாற்றல் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இடக்கை பழக்கம் உள்ளவர்கள் நுண்கலை, இசை, விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆர்வம் மட்டுமல்லாது அதில் சாதிப்பவர்களாகவும் இருப்பார்களாம்.

நம் வீட்டில் ஒருவர் இடக்கைப் பழக்கம் கொண்டவராக இருந்தால் அவருக்காக சில விஷயங்களை மாற்றிக்கொள்வோம் இல்லையா… இந்த உலகில் கோடிக்கணக்கில் இடக்கை பழக்கம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் உலகின் சில பழக்கங்கள் மாறினால் தப்பு இல்லைதானே..

அதற்கான முதலடியாக, உங்களைச் சுற்றி இருப்பவர்களில் யாருக்கேனும் இடக்கைப் பழக்கம் இருந்தால் அவரை சற்றுக்கூட வித்தியாசமாகப் பார்க்காதீர்கள். அவர் இடதுக்கையால் ஏதேனும் கொடுத்தால் வாங்க தயக்கம் காட்டாதீர்கள்.