ஸ்டீல் விலை உயர்வு.. வாகன தயாரிப்பாளர்கள் தீவிர ஆலோசனை.. ஏப்ரலில் வாகனங்கள் விலை உயரும்?

 

ஸ்டீல் விலை உயர்வு.. வாகன தயாரிப்பாளர்கள் தீவிர ஆலோசனை.. ஏப்ரலில் வாகனங்கள் விலை உயரும்?

ஸ்டீல் விலை உயர்ந்து வருவதால், ஏப்ரல் காலாண்டில் வாகனங்களின் விலை உயர்த்துவது தொடர்பாக வாகன தயாரிப்பாளர்கள் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார மந்தநிலை, கோவிட்-19 தொற்றுநோய் பரவல் போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன தயாரிப்பாளர்கள் நிம்மதி அடைந்தனர். அதேவேளையில், கடந்த ஜனவரி மாதம் வாகன தயாரிப்பாளர்கள் வாகனங்களின் விலையை உயர்த்தினர். மூலப்பொருட்களின் விலை உயர்வால் வேறு வழியில்லாமல் இதனை செய்கிறோம் என்று வழக்கம் போல் வாகனங்களின் விலையை உயர்த்தின.

ஸ்டீல் விலை உயர்வு.. வாகன தயாரிப்பாளர்கள் தீவிர ஆலோசனை.. ஏப்ரலில் வாகனங்கள் விலை உயரும்?
ராயல் என்பீல்டு

இந்த சூழ்நிலையில் தற்போது ஸ்டீவில் விலை அதிகரித்து வருவதை காரணம் காட்டி மீண்டும் வாகனங்களின் விலையை உயர்த்துவது குறித்து வாகன தயாரிப்பாளர்கள் தீவிரமாக யோசித்து வருவதாக தகவல். பெரும்பாலும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரும் ஏப்ரல் காலாண்டில் வாகனங்களின் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சித்தார்த் இது தொடர்பாக கூறுகையில், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பை ஈடுசெய்ய வரும் ஏப்ரலில் விலை உயரக்கூடும். ராயல் என்பீல்டு மற்றும் வர்த்தக வாகனங்கள் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஸ்டீல் விலை உயர்வு.. வாகன தயாரிப்பாளர்கள் தீவிர ஆலோசனை.. ஏப்ரலில் வாகனங்கள் விலை உயரும்?
கார்கள்

மகிந்திரா குழுமத்தின் ராஜேஷ் ஜெஜூரிகர் கூறுகையில், மூலப்பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகின்றன. 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நாங்கள் வாகனங்களின் விலையை அதிகரிப்போம் என்று தெரிவித்தார். அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குனர் கோபால் மஹாதேவன் கூறுகையில், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் ஏற்கனவே வாகன விலையை உயர்த்தினோம். இருப்பினும் ஸ்டீல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் எங்களுக்கு வேறு வழியில்லை வாகனங்களின் விலையை உயர்த்துவோம் என்று தெரிவித்தார்.