உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்த வசந்தகுமாரின் மறைவு வேதனை…தலைவர்கள் இரங்கல்

 

உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்த வசந்தகுமாரின் மறைவு வேதனை…தலைவர்கள் இரங்கல்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணியளவில் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்த வசந்தகுமாரின் மறைவு வேதனை…தலைவர்கள் இரங்கல்

இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான திரு.H.வசந்த குமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவரும், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்தவரும், எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த திரு. வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். திரு.வசந்த குமார் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, “வசந்தகுமார் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார். உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்திருக்கிறார் எச்.வசந்தகுமார்” எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் வசந்தகுமாரின் புகழ் நிலைத்து நிற்கும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தத் தூணாக இருந்தவர் என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, “கன்னியாகுமரி எம்.பி, வசந்தகுமாரின் மறைந்தார் என்ற செய்தி சோகத்தை ஏற்படுத்தியது. நாங்கள் ஒரு தீவிரமான மற்றும் கடின உழைப்பாளரை இழந்துள்ளோம். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை, அவரை நேசித்த மற்றும் மதிக்கும் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றிக்கொண்டிருந்தார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.