பாஜக இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை: எல் முருகன்

 

பாஜக இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை: எல் முருகன்

சென்னை தண்டையார்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவுக்கு முன்னதாக சென்னை கூட்டுறவு வங்கியில் சேர்மனாக இருந்த வி.கிரிநாத் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். விழாவில், லட்சுமணன் என்ற விவசாயிக்கு டிராக்டர் இலவசமாக வழங்கப்பட்டது.

பாஜக இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை: எல் முருகன்

விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், “தமிழ்நாட்டுக்கு மோடி என்ன செய்தார்? என கேட்கின்றனர். அவர் என்னவெல்லாமோ செய்தார். கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு செய்திருக்கிறார். முத்ரா, இலவச கேஸ், கிஷான் போன்ற பிரதமரின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். விவசாயிகள் விதை வாங்க, உரம் வாங்க, 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார், அதை மக்கள் நம்பவில்லை. பொய் என்பதற்கு அர்த்தம் ஸ்டாலின் தான். மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் இதுவரை நடத்திய பந்த் தோல்வியை தழுவியுள்ளது. இனி சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வியை தழுவுவார்கள். திமுக என்ற அரக்கனை, அசுரனை, தமிழக அரசியலை விட்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் விரட்டுவோம்.

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று சொல்கிறார்கள் ஆனால், பாஜக இல்லை என்றால் தமிழக அரசியலே இல்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் கேஸ் இணைப்பு பெற எம்.பி வீட்டு வாசலில் ரெக்கமண்டேஷன் கடிதத்திற்காக காத்திருக்க வேண்டும். தற்போது, பாஜக ஆட்சியில் இலவசமாக கிடைக்கிறது” எனக் கூறினார்.