எங்கள் வேல் துள்ளி வரும், பயமின்றி வரும்- எல்.முருகன்

 

எங்கள் வேல் துள்ளி வரும், பயமின்றி வரும்- எல்.முருகன்

நாங்கள் எதிர்ப்பை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. வேல் யாத்திரை தமிழகம் முழுவதும் உலா வரும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதற்கு முன்னதாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யாத்திரையை நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதியில் இருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரை 1 மாத காலம் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. இந்த வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாரதிய ஜனதா தேசியத் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தேசிய தலைவர் எல் முருகன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

எங்கள் வேல் துள்ளி வரும், பயமின்றி வரும்- எல்.முருகன்

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், “வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி பெற இன்னும் நாட்கள் இருக்கிறது. முதல்வருடனான சந்திப்பில் மருத்துவ உள் இட ஒதுக்கீடு குறித்து மட்டுமே பேசினேன். தமிழக அரசு அமல்படுத்திய 7.5% உள் இடஒதுக்கீடு 2 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கட்டும் .அதன்பிறகு உள்ஒதுக்கீட்டில் இடங்களை அதிகரிப்பது குறித்து ஆலோசிப்போம். நாங்கள் எதிர்ப்புக்கு அஞ்சுவோர் அல்ல. எங்கள் வேல் துள்ளி வரும், பயமின்றி வரும். கந்த சஷ்டி கவச பிரச்சனையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றது பாஜகதான் .

கருப்பர் கூட்டம் செந்தில்வாசன் திமுக ஐடி பிரிவில் வேலை செய்ததை ஸ்டாலின் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்கு சட்ட உதவியையும் செய்தனர். கருப்பர் கூட்டம் பின்னணயில் இருந்து அவர்களை இயங்கியது திமுக தான். பாஜகவில் பல தலைவர்கள் உண்டு, யாரோ ஒரு தொண்டர் எம்ஜிஆரை புகழ்ந்து அவரது படத்தை பயன்படுத்தியுள்ளார். மோடியும் அவர்போல மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார் என்பதை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்திருப்பார். தமிழக பிரச்சினையில் நாங்கள் மாநில மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாத்திரை துவக்க விழாவின் போது வன்முறையைத் தூண்ட கூடிய குற்றவாளிகள் யார் என்று அரசு கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.