கொரோனாவை பயன்படுத்தி மக்களை பாதிக்கும் நான்கு அவசர சட்டங்களை கொண்டுவந்த பா.ஜ.க அரசு! – கே.எஸ்.அழகிரி கண்டனம்

 

கொரோனாவை பயன்படுத்தி மக்களை பாதிக்கும் நான்கு அவசர சட்டங்களை கொண்டுவந்த பா.ஜ.க அரசு! – கே.எஸ்.அழகிரி கண்டனம்

கொரோனா பாதிப்பு காலத்தை பயன்படுத்தி கொண்டுவரப்பட்ட மக்களை பாதிக்கும் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட நான்கு அவசர சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இன்று ஜூலை 26ம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மத்தியில் நடைபெற்று வரும் பாஜக அரசு கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க அறிவித்துள்ள பொது முடக்கத்தினைப் பயன்படுத்தி பல்வேறு புதிய சட்டங்களை அறிவித்து வருகிறது. நாடாளுமன்றம் நடைபெறாத காலத்தில் அவசர சட்டத்தின் மூலமாக மக்கள் விரோத நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்திய அரசமைப்பு சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ள விஷயத்தில் கூட மாநில அரசுகளை கலந்து பேசாமல் தன்னிச்சையாக சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது. மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி என்பது இதுதானா?

சமீபத்தில் மின்சார சட்டத்திருத்த மசோதா – 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் – 2020, வேளாண் உற்பத்தி பொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் – 2020, விவசாயிகள் உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் – 2020 ஆகிய இந்த 4 சட்டங்களும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.

தமிழகத்தில் விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரத்தைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதை செய்யவில்லை எனில், தமிழக அரசுக்கு நிதியுதவி மறுக்கப்படும் என்று மிரட்டுகிறது. மிரட்டலுக்கு பணிகிற நிலையில் தமிழக அரசும் இருக்கிறது.

எனவே, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் 4 அவசர சட்டங்கள் இயற்றியதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்துக்களை பெற்று பிரதமருக்கு அனுப்புவது என்றும், வருகிற ஜுலை 27ம் தேதி அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடியை ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்திருக்கிறது.

விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டிருக்கிற இந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு தமிழகத்தின் எதிர்ப்பை உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.