கோலியின் டிரம்ப் கார்ட் மேஜிக்… சரண்டரான மோர்கன் படை!

 

கோலியின் டிரம்ப் கார்ட் மேஜிக்… சரண்டரான மோர்கன் படை!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையையான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில், இன்று ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பித்தது. இரு தொடர்களிலும் தோற்றதால் இத்தொடரிலாவது வென்று விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் மோர்கன் படை களமிறங்கியது.

கோலிக்கும் டாஸுக்கும் முன்ஜென்ம பகையோ என்னவோ தெரியவில்லை. மோர்கன் டாஸ் வென்றார். பும்ரா புது மாப்பிளையாகிவிட்டதால் அவர் இடத்தை நட்டுவை வைத்து கோலி நிரப்புவார் என்று எதிர்பார்த்தால் புதுமுகம் பிரஷித் கிருஷ்ணாவை இறக்கினார். அதே போல குருணால் பாண்டியாவை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்திவிட்டார். ஆட்டத்தின் முடிவிற்குப் பின்பே அவர்கள் இருவரும் கோலி இறக்கிய டிரம்ப் கார்டுகள் என்று தெரியவந்தது.

கோலியின் டிரம்ப் கார்ட் மேஜிக்… சரண்டரான மோர்கன் படை!

டி20 போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய ரோஹித், இன்றோ ஆடி களைத்தவர் போல விரைவாகவே வெளியேறினார். எப்போதுமே பெஞ்சில் உட்கார வைத்து இறக்கினால் வேற லெவலில் ஆடுவார் தவான். டி20 போட்டியில் உட்கார வைத்ததற்கு ஒருநாள் போட்டியில் வைத்து செய்துவிட்டார். நூலிழையில் சதத்தை நழுவவிட்டு 98 ரன்களில் நடையைக் கட்டினார்.

கோலியை சொல்லவே வேண்டாம் தன்னால் முடிந்த சிறப்பான சம்பவத்தை இங்கிலாந்துக்கு செய்துவிட்டு தான் சென்றார். டி20யில் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஷ் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார். 9 ரன்களிலேயே வெளியேறி ஏமாற்றிவிட்டார். அண்ணன் அதிரடி பாண்டியா 1 ரன்னில் அவுட்டானாலும் ஆல்ரவுண்டர் தம்பி பாண்டியா புரட்டி எடுத்துவிட்டார். அறிமுக போட்டியிலேயே அரைசதமடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். டிரம்ப் கார்ட்… டிரம்ப் கார்ட்…

கோலியின் டிரம்ப் கார்ட் மேஜிக்… சரண்டரான மோர்கன் படை!

ஒரு பிளேயர் ரெண்டு மூன்று போட்டிகளில் விளையாட விட்டால் அவர் லாயக்கில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் வரிந்துகட்டி வந்துவிடுவார்கள். அந்த வீரர்களுக்கு சில போட்டிகளில் ஓய்வு கொடுத்தாலே அவர்களே ஃபார்முக்கு திரும்பிவிடுவார்கள். அதற்கு இன்றைய உதாரணம் கேஎல் ராகுல். நான்கு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என 5ஆவது டி20யில் கோலி உட்கார வைத்து இன்றைய ஒருநாள் போட்டியில் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தார். கோலியின் நம்பிக்கையை ராகுல் பொய்யாக்கவில்லை. நடுவரிசையில் பில்லர் போல் அவர் நிற்கவில்லை என்றால் இன்று இந்தியா ஜெயித்திருக்க வாய்ப்பே இல்லை. ராகுல்-குருணால் ஆட்டத்தால் இந்தியா 300 ரன்களைக் கடந்து 318 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

கடினமான இலக்கை எதிர்நோக்கி ஆடவந்த இங்கிலாந்து அணியின் ஜெசன் ராயும் பெயர்ஸ்டோவும் துவம்சம் செய்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் 30 ஓவருக்குள்ளயே ஆட்டத்தை முடித்து கிளம்பிவிடுவார்களோ என்று நினைக்க வைத்துவிட்டார்கள். அப்போது தான் கோலியின் இன்னொரு டிரம்ப் கார்டான பிரஷித் கிருஷ்ணா ராய்க்கு சலாம் சொல்லி அனுப்பிவைத்தார். அதே ஸ்டைலில் ஸ்டோக்ஸையும் வழியனுப்பினார்.

கோலியின் டிரம்ப் கார்ட் மேஜிக்… சரண்டரான மோர்கன் படை!

இருந்தாலும் பெயர்ஸ்டோவின் பேயாட்டத்தை மட்டும் நிறுத்தவே முடியவில்லை. சிக்சர், போர் என நாலா பக்கமும் சிதறடித்துவிட்டார். எப்படியோ ஷர்துல் தாக்கூர் 94 ரன்களில் வெளியேற்றினார். அப்போது தான் நிம்மதி பெருமூச்சே வந்தது. ஷர்துல் அடுத்தடுத்து கேப்டன் மோர்கன், பட்லர் இரண்டு பேருக்கும் குட்பை சொல்லினார்.

பிரஷித் கிருஷ்ணா மீண்டும் களத்தில் இறங்கி பில்லிங்ஸை தூக்க, லைட்டாக குடைச்சல் கொடுத்த மொயின் அலியை புவனேஷ்வர் குமார் காலி செய்தார். அவ்வளவு தான் இங்கிலாந்து கதை முடிந்தது. சுட்டிக்குழந்தை சாம் கரண், அண்ணன் டாம் கரண், அதில் ரஷித் ஆகிய டெய்லெண்டர்களை போட்டி போட்டு இந்திய பவுலர்கள் தூக்கி சாப்பிட்டனர். இறுதியில் 251 ரன்களுடன் இங்கிலாந்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. எல்லாம் டிரம்ப் கார்ட் மேஜிக்ஸ்… அடுத்த போட்டி மார்ச் 26ஆம் தேதி நடைபெறுகிறது.