கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள், பரிசல் இயக்க தடை!

 

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள், பரிசல் இயக்க தடை!

ஈரோடு

கோபி அடுத்த கொடிவேரி அணையில் அதிகளவில் வெள்ள நீர்வெளியேறி வருவதால் சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித் துறையினர் தடை விதித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அணை நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியது. இதனை அடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் 6 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் முழுமையாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்தடைந்தது.

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள், பரிசல் இயக்க தடை!

வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால், அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் பொதுப்பணித் துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும், அணையில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்போனில் செல்பி எடுக்கவும் தடை விதித்து உள்ளனர். தொடர்ந்து, கொடிவேரி அணைக்கு இருபுறமும் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கடத்தூர் மற்றும பங்களாபுதூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சவுண்டபூர், மேவானி, கீழ்வானி, கூகலூர், அரக்கன்கோட்டை, அம்மா பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, கால்நடைகள் மேய்க்கவோ செல்ல வேண்டாம் எனவும், ஆற்றில் நீர் அதிகவில் வந்து கொண்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தபட்டு உள்ளது.