` இ பாஸ் பெறவில்லை; கொடைக்கானலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர்!’- சிக்கிய நடிகர்கள் சூரி, விமல்

 

` இ பாஸ் பெறவில்லை; கொடைக்கானலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர்!’- சிக்கிய நடிகர்கள் சூரி, விமல்

ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் பெறாமல் சட்டவிரோதமாக கொடைக்கானலுக்கு நுழைந்ததாவும், ஊரடங்கு விதிகளை மீறி தொற்று நோயை பரப்பும் வகையில் கொடைக்கானலுக்குள் நுழைந்ததாகவும் நடிகர்கள் சூரி, விமல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல நடிகர்கள் விமல் மற்றும் சூரி கடந்த 15ஆம் தேதி தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சென்றனர். அதோடு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு சென்ற அவர்கள், தடையை மீறி 17ஆம் தேதி சென்று மீன்பிடித்தனர். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதைப் பார்த்த கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரி தேஜஸ்வி விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், கடந்த 17ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஊரில் இல்லாத நிலையில், சில கீழ்நிலை ஊழியர்கள் உதவியுடன் நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட சிலர் பேரிஜம் ஏரிக்குள் தடையை மீறி சென்றது தெரியவந்தது. ந‌டிக‌ர்கள் இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை அதிகாரி இருவருக்கும் தடையை மீறி அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

` இ பாஸ் பெறவில்லை; கொடைக்கானலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர்!’- சிக்கிய நடிகர்கள் சூரி, விமல்

கொடைக்கானலுக்குள் விமல், சூரி முறையாக அனுமதி பெற்று நுழைந்தார்களா என கோட்டாட்சியர் சிவக்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் பெறாமல் சட்டவிரோதமாக கொடைக்கானலுக்கு நுழைந்தது தெரியவந்தது. இதை அடுத்து ஊரடங்கு விதிகளை மீறி தொற்று நோயை பரப்பும் வகையில் கொடைக்கானலுக்குள் நுழைந்ததாக நடிகர்கள் சூரி, விமல் மீது கோட்டாட்சியர் சிவக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இத்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல்துறையினர் நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்டவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்கள் எங்கு தங்கினார்கள், எங்கெங்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சூரி, விமல் கொடைக்கானலுக்குள் நுழைய உதவி செய்த, சோதனைச்சாவடி ஊழியர்கள், விடுதி ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.