கிசான் முறைகேடு; புதுக்கோட்டையில் ரூ.1.40 கோடி வசூல்!

 

கிசான் முறைகேடு; புதுக்கோட்டையில் ரூ.1.40 கோடி வசூல்!

புதுக்கோட்டையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1.40 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் கிசான் திட்டத்தில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது அண்மையில் அம்பலமானது. அதாவது, விவசாயிகள் அல்லாத லட்சக் கணக்கான மக்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதன் பேரில், இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் வருகிறது.

கிசான் முறைகேடு; புதுக்கோட்டையில் ரூ.1.40 கோடி வசூல்!

இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாறியதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருவதோடு முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.40 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 9,750 போலி பயனாளிகள் கண்டறியப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.2.30 கோடி பணத்தை வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.