பிள்ளைகளின் இணைய உலகம் – பெற்றோர் பங்கு என்ன ?

 

பிள்ளைகளின் இணைய உலகம் – பெற்றோர் பங்கு என்ன ?

எதிர்வரும் காலம் டிஜிட்டல் மயம் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தாலும், கொரோனா காலம் அதை துரிதப்படுத்தி விட்டது.

’அப்படி என்னதான் இருக்கு அந்த கருமத்த வச்சிட்டு, வந்து சாப்பிடு’ என்று சொன்ன பெற்றோர்கள், இப்போது தங்கள் பிள்ளைகளுக்கு ஆன்லைன் வகுப்புக்கு லேப்டாப், ஸ்மார்ட் போன் வாங்கித் தரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த கண்காணிப்பும் இல்லாமல், இளம் தலைமுறைக்கு இணையத்தை திறந்து விடுவதன் அபாயமும் கவனிக்கத்தக்கது.

பிள்ளைகளின் இணைய உலகம் – பெற்றோர் பங்கு என்ன ?

ஆன்லைன் வகுப்பில் இருக்கிறேன் என ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பக்கம் செல்லும் பிள்ளைகளை சமூக சீரழிவு உள்ளடக்கங்கள் எளிதாக ஈர்த்து விடுகின்றன. கடந்த சில நாட்களாக, ஆன்லைன் வகுப்பில் இணையும் பெண் குழந்தைகளுக்கு இப்படியான தொந்தரவு அதிகரித்து வருகிறது.

இந்த நேரத்தில், குழந்தைகளுக்கு தொழில்நுட்ப வசதிகளின் நன்மை தீமைகள் குறித்து பேச நேரம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்படி நேரம் ஒதுக்கி பேச பெற்றோர்களுக்கு அது குறித்து போதிய அறிவு இருக்கின்றதா ? என்பதும் கேள்விக்குறி. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பதின் வயது குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் மன அழுத்தம் குறித்து தொடர்ச்சியாக மருத்துவ உலகம் சுட்டிக் காட்டி வருகிறது.

பிள்ளைகளின் இணைய உலகம் – பெற்றோர் பங்கு என்ன ?

ஃபேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் மனநிலை, பக்குவம், பாலியல் விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் போக்குகளை பெற்றோர்கள் அறிவதில்லை. பதின்ம வயதினருக்கு இப்படியான புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில்தான், சரிபாதி பெற்றோர்களுக்கு இணையத்தை பயன்படுத்தவே தெரிவதில்லை என்கின்றன ஆய்வுகள்.

இப்போது பெற்றோர்களே முன்வந்து ஆன்லைன் உலகிற்குள் குழந்தைகளை அனுமதிக்கும்போது, அவர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும், உதவ முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

இதுதான் இன்றைய தலைமுறைக்கு தேவையாக இருக்கிறது. அதாவது குழந்தைகளுக்கு ஆன்லைன் பயன்பாடு, பெற்றோர்களுக்கு ஆன்லைன் விழிப்புணர்வும் உருவாக்க வேண்டும்.

பிள்ளைகளின் இணைய உலகம் – பெற்றோர் பங்கு என்ன ?

தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது என்பதைத்தான் கொரோனா ஊரடங்கு காலம் உணர்த்தியுள்ளது.

ஒரு காலத்தில் ரேடியோ இருந்த வீடுகளை ஆச்சரியத்தோடு பார்த்தோம். பிறகு டிவியை வந்தபோது அதன் மீதான பயபக்தி அளவிட முடியாதது. நவீன சாதனங்களின் பயன்பாட்டு தேவைகள் கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாதவை.

எனவேதான், ஆன்லைன் பயன்பாட்டில் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் எனில், இணையம் குறித்து பெற்றோர்களும் புரிதல் வேண்டும். இல்லையென்றால் இந்திய சமூகத்தின் தொழில்நுட்ப வேகத்துக்கு எதிர்காலம் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

-அ.ஷாலினி