நகைக்கடையில் நூதன முறையில் செயின் திருட்டு; கேரள தம்பதி கைது

 

நகைக்கடையில் நூதன முறையில் செயின் திருட்டு; கேரள தம்பதி கைது

கோவையில் பிரபல நகைக்கடையில் நூதன முறையில் 4 சவரன் தங்க செயினை திருடிய, கேரள தம்பதியினரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

நகைக்கடையில் நூதன முறையில் செயின் திருட்டு; கேரள தம்பதி கைது


கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பவிழம் ஜூவல்லர்ஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நகை வாங்குவதாக கூறி சென்ற கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சுதீஷ் மற்றும் ஷானி தம்பதியினர், தங்க செயின்களை பார்வையிட்டு விட்டு, நாளை வருவதாக கூறிவிட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில், தங்க செயின்களை சரிபார்த்த ஊழியர்கள், அதில் ஒரு செயின் மட்டும் வித்தியாசமாக இருந்ததை அறிந்து மேலாளரிடம் தெரிவித்தனர். இதனால் அந்த செயினை சோதனை செய்தபோது, சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 சவரன் தங்க செயின் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தனர்.

நகைக்கடையில் நூதன முறையில் செயின் திருட்டு; கேரள தம்பதி கைது

அதில் சுதீஷின் மனைவி ஷானி, தனது கழுத்தில் இருந்த கவரிங் நகையை லாவகமாக மாற்றி வைத்துவிட்டு, தங்க செயினை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அதேபகுதியில் இருந்த சுதீஷ் மற்றும் ஷானியை மடக்கிப்பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 4 சவரன் தங்க செயினை மீட்டனர். தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், இருவரும் பல்வேறு இடங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும், ஆலப்புழா காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்தியசிறையில் அடைத்தனர்.