தங்கக் கடத்தல் விவகாரம்! கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்

 

தங்கக் கடத்தல் விவகாரம்! கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்

திருவனந்தபுரம் மணப்பாடியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக முகவரிக்கு சில தினங்களுக்கு முன் ஒரு பெட்டி வந்தது. இதனை எடுக்க யாரும் வராத நிலையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், முறைப்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று சோதனையிட்டனர். பெட்டியை திறந்தபோது அதில் 13 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் எந்த சோதனைக்கும் உட்படாமல் விமான நிலைய சரக்கு கிடங்கின் வெளியேறும் வாசல் வழியாக தங்கம் வந்த பார்சலை எடுத்துச்செல்ல முயன்ற ஒருவரை சுங்கத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் பெயர் ஸரித் என்பதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தில் முன்பு பணிபுரிந்தவர் என்பதும் தெரிந்தது. ஒழுங்கீன செயல்களால் தூதரகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இவர் கடத்தல் தங்கத்தை எடுக்க வந்தது பற்றி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தூதரகத்தில் முன்னர் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது அம்பலமானது. இந்தப் பெண், தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர் என்பதும், இவருக்கான ஆறு மாத ஒப்பந்த பணி கடந்த ஜூன் மாதமே முடிந்தும் அவர் அதே பிரிவில் பணியமர்த்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

தங்கக் கடத்தல் விவகாரம்! கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்

இதையடுத்து ஸ்வப்னாவின் வீட்டிற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். ஸ்வப்னா சுரேஷ் இது போன்று 10 முறை இதேபோன்று டிப்ளமேட்டிக் பார்சல் மூலம் தங்கம் கடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்வப்ணாவுக்கும், அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிவசங்கர் முதல்வரின் முதன்மை செயலாளராவர். இந்த சர்ச்சையை அடுத்து முதல்வரின் முதன்மை செயலாளர் பதவியிலிருந்து சிவசங்கர், நீக்கப்பட்டு பீர் முகமது பணியமர்த்தப்பட்டுள்ளார்.